×
Saravana Stores

டெல்லி கேப்பிடல்சுக்கும் நெருக்கடி தொடர் தோல்வியை தவிர்க்குமா மும்பை?

மும்பை: ஐபிஎல் தொடர்களில் அதிக முறை சாம்பியன் பட்ட வென்ற அணிகளில் ஒன்றான மும்பை அணி நடப்புத் தொடரில் இன்னும் முதல் வெற்றியை வசப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடிய முதல் 3 லீக் ஆட்டங்களிலும் ஹாட்ரிக் தோல்வியை தழுவிய மும்பை, புள்ளிக் கணக்கை தொடங்க முடியாமல் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை சரியாக கவனிக்காததால் தான் தோல்வி என்று விமர்சனங்கள் தொடர்கின்றன.

குஜராத் அணியின் கேப்டனாக இருந்த 2 தொடர்களிலும் அணியை பைனல் வரை கொண்டு சென்றதுடன், முதல் தடவையே கோப்பையை வெல்ல வைத்தவர் தான் ஹர்திக். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பதவியில் இருந்து தூக்கிவிட்டு ஹர்திக்கை போட்டது சர்ச்சையை கிளப்பியது. அந்த அணியின் ரசிகர்களே ஹர்திக்கை கடுமையாக விமர்சித்து கேலி, கிண்டல் செய்வது தொடர் கதையாகி உள்ளது. இதனால், மைதானத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அவர் தவித்து வருகிறார்.

ரோகித், இஷான், திலக் வர்மா, டிம் டேவிட், பும்ரா, கோட்சீ என அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், மும்பை அணியால் இன்னும் டேக் ஆஃப் ஆக முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் களமிறங்க உள்ளது என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லியும் தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கிறது. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இடையில் ஒரு ஆட்டத்தில் மட்டும் நடப்பு சாம்பியன் சென்னையை பந்தாடியது. மும்பையை போலவே டெல்லி அணியிலும் பன்ட், பிரித்வி ஷா, வார்னர், மிட்செல் மார்ஷ், அக்சர் என அதிரடிக்கு பஞ்சமில்லை என்றாலும், ஒருங்கிணைந்து விளையாடாதது பின்னடைவை கொடுக்கிறது. பந்துவீச்சிலும் அக்சர், அன்ரிச், இஷாந்த், முகேஷ் அனுபவம் பெரிதாகக் கை கொடுக்கத் தவறி வருகிறது.
இரு அணிகளுமே தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post டெல்லி கேப்பிடல்சுக்கும் நெருக்கடி தொடர் தோல்வியை தவிர்க்குமா மும்பை? appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Delhi Capitals ,IPL ,Gujarat ,Hyderabad ,Rajasthan ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...