×

ஒன்றிய அமைச்சர் ரூபாலா அவதூறு பேச்சு குஜராத் பா.ஜ அலுவலகம் முன்பு ராஜ்புத் பெண்கள் தீக்குளிக்க முயற்சி: 5 பெண்கள் கைது, பலருக்கு வீட்டுக்காவல், பா.ஜ மாநில தலைவருக்கு கருப்புக்கொடி

அகமதாபாத்: ராஜபுத்திரர்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் ரூபாலாவை வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்க வலியுறுத்தி தீக்குளிக்க சென்ற ராஜ்புத்திர பெண்கள் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கடந்த புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்பு நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வௌிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்ததாகவும், அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜ்புத் சமூகத்தினர், ராஜ்கோட் வேட்பாளர் ரூபாலாவை நீக்க வலியுறுத்தி வருகின்றனர். ரூபாலாவை நீக்க வலியுறுத்தி ராஜ்புத் சமூக பெண் தலைவர் பத்மினிபா வாலா உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ரூபாலாவை பாஜ நீக்கும் வரை போராட்டம் தொடரும். அவரை நீக்கா விட்டால் பாஜ அலுவலகங்கள் முன் ராஜ்புத் பெண்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி நேற்று காந்திநகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் செல்ல முயன்ற 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை சந்திக்க சென்ற ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு தலைவர் மக்ரானாவும் கைதுசெய்யப்பட்டார். மேலும் பலர் அங்கு தீக்குளிக்கும் போராட்டம் நடத்த வரலாம் என்பதால் குஜராத் பா.ஜ அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஜாம் கம்பாலியா நகரில் குஜராத் பாஜ தலைவர் சி.ஆர்.பாட்டீல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராஜ்புத்திர பெண்கள் கருப்பு கொடி காட்டி, ரூபாலாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ராஜ்புத்திர இன பெண்கள் போராட்டத்தால் குஜராத்தின் பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் போராட்டம் நடத்தலாம் என்றுசந்தேகம் எழுந்த ராஜபுத்திர பெண்களை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். இதனால் குஜராத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரூபாலா மனுத்தாக்கல் செய்தால் 400 பேர் போட்டி வேட்புமனு: ராஜ்கோட்டில் ஷத்ரிய சமூகத்தினர் நேற்று பேரணியாக சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒன்றிய அமைச்சர் ரூபாலாவுக்கு எதிராக மனு கொடுத்தனர்.

மேலும் அவர்கள் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில்,’ ரூபாலா போட்டியிடும் ராஜ்கோட் தொகுதியில் வாக்குச் சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஆபரேஷன் ரூபாலா பிரச்சாரத்தின் கீழ் குஜராத் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். ரூபாலா வேட்புமனு தாக்கல் செய்தால், அவருக்கு எதிராக 400 ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்’ என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை ஷத்ரிய தலைவர் கரன்சிங் சாவ்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

* மோடி ஆட்சி பறிபோய்விடும்
ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு தலைவர் மக்ரானா கூறுகையில், ‘ தீக்குளிப்பது போன்ற செய்வது போன்ற எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வற்புறுத்துவதற்காக சென்றேன். என்னையும் போலீசார் கைது செய்துவிட்டனர். ஒன்றிய அமைச்சர் ரூபாலாவின் வேட்புமனுவுக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரம் அடையும்.

ராஜ்புத்திரர்கள் பாஜவின் பாரம்பரிய வாக்கு வங்கி. பிராமணர் மற்றும் பனியா ஆகியோர் போல் பாரம்பரியமாக பாஜவை ஆதரிப்பதில் ராஜபுத்திரர்களும் பெரிய பங்கு வகித்துள்ளனர். இதுவரை ராஜபுத்திரர்கள் பாஜவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் ஒரு நபருக்காக மோடி மத்தியில் ஆட்சியை இழக்கத் தயாராக இருக்கிறார். அவர் விரும்பினால் அது அப்படியே நடக்கட்டும்’ என்று எச்சரித்தார்.

The post ஒன்றிய அமைச்சர் ரூபாலா அவதூறு பேச்சு குஜராத் பா.ஜ அலுவலகம் முன்பு ராஜ்புத் பெண்கள் தீக்குளிக்க முயற்சி: 5 பெண்கள் கைது, பலருக்கு வீட்டுக்காவல், பா.ஜ மாநில தலைவருக்கு கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Tags : Union minister ,Rupala ,Rajput ,Gujarat ,BJP ,AHMEDABAD ,Minister ,Rajputs ,Parshotham Rupala ,Rajkot ,
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...