×

குஜராத் ராஜ்கோட் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?.. வலுக்கும் எதிர்ப்பு; முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பாஜக

காந்திநகர்: குஜராத் ராஜ்கோட் பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்றக் கோரும் சத்ரிய சமூக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலை முற்றுகையிட்டு காலையில் சத்ரிய சமூக மக்கள் ஆவேசமாக முழக்கம் எழுப்பினர். கம்பாலியா என்ற இடத்தில் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க வந்த குஜராத் மாநில பாஜக தலைவரை முற்றுகையிட்டனர். பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் பங்கேற்ற கூட்டத்தில் நாற்காலிகளை அடித்து நொறுக்கி சத்ரிய சமூகத்தினர் ஆவேசம் அடைந்தனர்.

ரூபாலாவை மன்னிக்கும்படி குஜராத் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையையும் சத்ரிய சமூக மக்கள் நிராகரித்தனர். ராஜபுத்திர சமூகத்தை அவமதித்த ரூபாலாவை ராஜ்கோட் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது என எதிர்ப்பு வலுக்கிறது. ரூபாலாவை மாற்றாவிடில் நாடு முழுவதும் பாஜகவை புறக்கணிப்போம் என்று சத்ரிய சமூகத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். சத்ரிய சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் குஜராத் முழுவதும் ரூபாலாவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பட்டிதார் சமூகத்தை சேர்ந்த புருஷோத்தம் ரூபாலாவை மாற்றினால் அந்த சமூகத்தின் வாக்குகள் பறிபோகும் என பாஜக அச்சம் அடைந்துள்ளது. ரூபாலாவை மாற்றும் வரை ஓயப்போவதில்லை என்று சத்ரிய சமூக மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரமாக ரூபாலாவுக்கு எதிராக குஜராத்தில் போராட்டம் வெடிப்பதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜகவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை கண்டித்து சத்ரிய சமூகத்தினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ராஜபுத்திர சமூகத்தை இழிவுப்படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ரூபாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜ்கோட் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

The post குஜராத் ராஜ்கோட் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?.. வலுக்கும் எதிர்ப்பு; முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பாஜக appeared first on Dinakaran.

Tags : Gujarat Rajkot ,Gandhinagar ,BJP ,Bhushotam Rupala ,Gujarat ,C. R. ,Patil ,Kambalia ,Dinakaran ,
× RELATED ராஜ்புத்திரர்களின் கடும்...