×
Saravana Stores

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்: திமுக தொண்டர்கள் கண்ணீர்..!!

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகழேந்தியின் உயிர் பிரிந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புகழேந்தி கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், புகழேந்திக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து மருத்துவக்குழு விரைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மருத்துவமனை முன்பு திமுகவினர் திரளானோர் கூடினர். காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உயிர் பிரிந்தது.

புகழேந்தி மறைவு; திமுக தொண்டர்கள் கண்ணீர்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி. 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 -86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி திமுகவின் மூத்த நிர்வாகி ஆவார். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன் கூடியுள்ள திமுக தொண்டர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

திமுகவின் அனுபவம் மிக்க நிர்வாகி புகழேந்தி:

காலஞ்சென்ற சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி திமுகவின் அனுபவம் மிக்க மூத்த நிர்வாகி ஆவார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்த நா.புகழேந்தி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த புகழேந்தி 2019இல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

The post விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்: திமுக தொண்டர்கள் கண்ணீர்..!! appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Constituency ,Dimuka ,Viluppuram ,Wikivrawandi ,Dimuka M. L. A. Glorious ,Viluppuram Government Hospital ,Puzhenthi ,Viluppuram District Vikriwandi Assembly ,Wikriwandi ,M. L. A. ,Glorious ,
× RELATED திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை...