×

பதற்றமான இடங்களில் கண்காணிப்பு பணி 100 சதவீத வாக்குப்பதிவிற்கான நடவடிக்கைகள் தீவிரம்

*அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்

*தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள்

விருதுநகர், ஏப்.6: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைமுறை விதிகள் என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. அந்த காலத்தில் தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கு குடவோலை முறை இருந்தது. இந்த நடைமுறை பல்வேறு கட்டங்களாக மாற்றம் அடைந்து தற்போது தேர்தல் என்ற வடிவம் பெற்றுள்ளது.

தேர்தலில் முறைகேடுகளை முழுமையாக தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிவிப்பு வெளியானதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இவற்றை அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையான பண பரிமாற்றத்தை தடுக்க அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் தொடர்கிறது. இதில் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் தினந்தோறும் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் சிக்கி வருகிறது.

இதற்கிடையே நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்ய வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் வாக்குப்பதிவு மேற்கொண்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தினத்தை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் யாரும் நீண்டதூர பயணங்களுக்கு திட்டமிட வேண்டாம். அப்படியே கண்டிப்பாக வெளியூர் செல்ல வேண்டும் என்றால் ஏப்.19ம் தேதி காலையில் வாக்குப்பதிவை முடித்துவிட்டு வெளியூர் செல்லும்படி ஏற்பாடு செய்வது சிறப்பானது. விடுமுறையை தங்கள் சொந்த காரணங்களுக்காக செலவழிக்க விரும்புவோர், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவை மேற்கொள்வதை மறக்காமல் இருக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்ல இயலாத 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையிலும், பணி காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல இயலாத பத்திரிகையாளர்கள் வாக்களிக்கும் வகையில் விருப்ப படிவம் வழங்கப்பட்டு அவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்நிலை வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியுள்ள அனைவருடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, இளைய தலைமுறையினர் தங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்வதுடன் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் வாக்களிக்க செய்து 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய ஒத்துழைப்பு அளித்து ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

வாக்களிக்க வரும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பிரச்னைகள் உருவாகாமல் தவிர்க்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைமுறைகளை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வாக்குப்பதிவு செய்திடும் வகையில் சாய்வுதள நடைமேடை, சக்கர நாற்காலிகள், குடிநீர், கழிப்பறை, வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். நமக்கு விருப்பமான ஆட்சியாளரை தேர்வு செய்ய நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு இது. இதனை தவறவிடக்கூடாது. எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ‘காபி வித் கலெக்டர்’ என்ற நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மாணவர்களுடன் கல்வி தொடர்பாக கலந்துரையாடிய கலெக்டர் ஜெயசீலன், தற்போது முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காபி வித் கலெக்டர் 66வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 150 முதல் முறை வாக்காளர்களுடன், கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.

The post பதற்றமான இடங்களில் கண்காணிப்பு பணி 100 சதவீத வாக்குப்பதிவிற்கான நடவடிக்கைகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...