×

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் புதிய உச்சம் தொட்டது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும் சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.87-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள், நகை வாங்குவோர் கலக்கம் அடைந்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகள் வாங்குவது வழக்கமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் தங்கம் சேமிப்பு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் வரலாற்று உயரத்தையும் தொட்டு வந்தது.

தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்து சவரன் ரூ.52,920 ஆக புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மார்ச் 1 முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.5,640 விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் ஒன்றிய அரசு வரியை குறைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது.

அதன் பிறகு அதிரடியாக உயர்ந்து 29ம் தேதி ஒரு சவரன் 51 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.51,120க்கு விற்பனையானது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,560க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் மறுநாள் பெயரளவுக்கு குறைந்து சவரன் ரூ.51,440க்கு விற்கப்பட்டது. அதேசமயம் மறுநாளே, அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரம் ஆனது.

இந்த நிலையில் வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,545க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் ஏற்கனவே இருந்த உட்சபட்ச விலை அனைத்தையும் முறியடித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ரூ.280 குறைந்து 52,080க்கு விற்பனை ஆனது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை தினமும் உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர வைத்து கொண்டுள்ளது.

The post புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…