கொள்ளிடம், ஏப்.6: கொள்ளிடத்தில் 5 மாதங்களுக்கு மேலாக குவிந்து கிடந்த குப்பைகள் அப்பகுதி மக்கள் முன்வந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் கடைத்தெரு, ரயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கிறது. கொள்ளிடம் அக்ரஹார தெருவில் செல்ல முடியாதபடி சாலையை குப்பைகள் அடைத்துக் கொண்டு கிடந்தன.
மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மற்றும் இறந்த விலங்கினங்கள் அனைத்தும் குப்பையோடு குப்பையாக கிடந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. குப்பை கொட்டுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய இடம் தேர்வு செய்யப்படாததால் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த இடத்தில் கொட்டப்பட்டு குவியலாக காட்சியளித்தது.
தூய்மை பணியாளர்களும் குப்பைகளை சேகரித்து எடுத்துச் சென்று கொட்டுவதற்கு இடம் இல்லாததால் சேகரிக்கப்பட்ட குப்பைகளை தெருவின் ஒரு பகுதியில் மட்டுமே கொட்ட முடிந்தது. இந்நிலையில் அக்ரஹர தெருவில் கடந்த 5 மாதங்களாக மலைபோல் குவிந்து வந்த குப்பைகளை அகற்ற யாரும் முன் வராததால் நேற்று தெரு மக்கள் சார்பில் குப்பைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சாலை நடுவே கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. சாலை ஓரம் உள்ள குப்பைகளையும் அகற்றுவதாக முடிவு செய்தனர். ஊராட்சி சார்பில் குப்பைகளை நிரந்தரமாக கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்து குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கொள்ளிடம் பகுதியில் மலைபோல் தேங்கி கிடந்த குப்பைகளை தெருமக்கள் அகற்றினர் appeared first on Dinakaran.