×

100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்டனர் சுத்தம் செய்ய இறங்கிய போது

ஒடுகத்தூர், ஏப்.6: ஒடுகத்தூர் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் நேற்று உயிருடன் மீட்டனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ராஜாபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமத்தின் நடுவே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 100 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. தற்போது, இந்த கிணறு சரிவர பராமரிக்காததால் அதில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் குவிந்து பயன்பாடற்று இருந்துள்ளது. இதனை, ஊர் மக்கள் சுத்தம் செய்ய எத்தனையோ முறை முயற்சித்தும் முடியாமல் போயிவிட்டதாம். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மணி(25) என்பவர், இந்த 100 அடி ஆழம் கொண்ட கிணற்றை சுத்தம் செய்ய முடிவெடுத்து நேற்று மாலை கிணற்றில் கயிறு மூலம் இறங்கியுள்ளார்.

அப்போது, திடீரென கை நழுவி மணி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த ஊர் மக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. மேலும், கிணற்றில் விழுந்த மணிக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மீட்பது சற்று சிரமமாக இருந்துள்ளது. பின்னர், இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த மணியை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒடுகத்தூர் அருகே பொது கிணற்றை சுத்தம் செய்ய முயன்ற போது 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து சுமார் ஒரு மணி நேரம் வாலிபர் உயிரை கையில் பிடித்து கொண்ட திக் திக் நிமிடத்தால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

The post 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்டனர் சுத்தம் செய்ய இறங்கிய போது appeared first on Dinakaran.

Tags : fire ,Odugathur ,fire department ,Rajapuram ,Vellore district ,Dinakaran ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி