- அரசு பொறியியல் கல்லூரி
- நாகர்கோவில்
- கன்னியாகுமாரி
- மக்களவை
- விளவங்கோடு
- நாகர்கோயில் கோனா
- நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரி
நாகர்கோவில், ஏப். 6: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு 22 வேட்பாளர்களும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். வரும் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை இடம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்ட்ராங்க் ரூம் ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிறது. பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் மேல் தளத்திலும், கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிக்கு கீழ் தளத்திலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில்,வாக்கு எண்ணிக்கை மையமும் வேகமாக தயாராகி வருகிறது. அங்கு செய்யப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான தர் நேற்று பார்வையிட்டார். நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) வெள்ளைச்சாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தற்போது தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக மொத்தம் இரும்பிலான 600 தூண்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள ஸ்டாங்க் ரூம் ஜன்னல்கள் முழுவதுமாக அடைக்கப்பட உள்ளது. எந்த விதமான துளைகளும் இல்லாத வகையில் ஸ்டாங்க் ரூம் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் இருக்கும் வகையில் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட உள்ளன.
தனி கட்டுப்பாட்டு அறை மற்றும் பாதுகாப்புக்கு தற்காலிக டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரவிலும் அதிக வெளிச்சம் இருக்கும் வகையில் தனி இணைப்புகள் கொடுக்கப்பட்டு மின் சப்ளை செய்யப்பட உள்ளது. இது பற்றிய விபரத்தை கலெக்டர் கேட்டறிந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. எனவே பெயிண்ட் மூலம் வாக்குசாவடிகளின் எண்களை எழுத முடியாது என்பதால், ஸ்டிக்கர்கள் மூலம் வாக்கு சாவடி எண்கள் குறிக்கப்பட உள்ளன. கன்னியாகுமரி மக்களவை தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இந்த வாக்கு எண்ணிக்கை மையம் ரூ.95 லட்சத்தில் தயாராகி வருகிறது . வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் சாலையும் சீரமைக்கப்பட உள்ளது.
The post நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் ₹95 லட்சத்தில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம் பாதுகாப்பு டவர், தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.