×

நீட் தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ஜிஎஸ்டி, இடஒதுக்கீடு உச்சவரம்பு ரத்து; அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீதம்; 30 லட்சம் பேருக்கு அரசு வேலை; கல்விக்கடன் தள்ளுபடி; மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில் சலுகை; காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அசரவைக்கும் வாக்குறுதிகள்

புதுடெல்லி: ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, புதுவை, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு, ஜிஎஸ்டி, இடஒதுக்கீடு உச்ச வரம்பு ரத்து, கல்வி கடன் தள்ளுபடி, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை, 30 லட்சம் காலியிடம் உடனடியாக நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட அசர வைக்கும் அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வௌியிட்டது. மக்களவை தேர்தல் வரும் 19 தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், திமுக உள்பட மொத்தம் 25க்கும் அதிகமான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று காலை 11.30 மணிக்கு வௌியிட்டார். அப்போது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்பட மூத்த தலைவர்கள் இருந்தனர்.

காங்கிரஸ் வௌியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: ஒன்றிய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்துவோம். தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு மாதத்துக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை உள்ளது. இதனை ரூ.1,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களின் வங்கி கணக்கில் எந்தவித நிபந்தனையுமின்றி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நேரடியாக செலுத்தப்படும். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அங்கன்வாடிகளில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். ஒன்றிய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஊதிய உயர்வு: நூறு நாள் வேலைத் திட்டத்தின் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது நாளொன்று ரூ.400 என்பது உறுதி செய்யப்படும். நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும். மேலும் 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறையை களையும் வகையில் அது மறுஆய்வு செய்யப்படும். எல்ஜிபிடி அதாவது ஓரினசேர்க்கையாளர் சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். மாநிலம் வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். பழகுநர் பயிற்சி மேற்கொள்ள ஆண்டுக்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை நிதி வழங்கப்படும்.

இலவச பள்ளி கல்வி: இதேபோன்று ஆசிரியர்கள் அவர்களது வேலையை தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்படும். நாடு முழுவதும் பள்ளி கல்வி இலவசமாக வழங்கப்படும். வேளாண் விளை பொருட்கள் தொடர்பான குறைந்த பட்ச ஆதாரவிலை விவகாரங்களில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை நிறைவேற்றப்படும்.

அக்னிபாத் திட்டம் ரத்து: அரசு தேர்வுகள் மற்றும் அரசுப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும். மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும். மீனவர் சமுதாயத்துக்கு என்று தனி வங்கி கொண்டு வரப்படும். இளைஞர்களின் ராணுவ பணி கனவை சிதைத்த அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.

நீட் தேர்வு விலக்கு: நீட் நுழைவு தேர்வு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை மாநில அரசுக்கு விடப்படும். பரவலான வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக, ஒரு முறை நிவாரண நடவடிக்கையாக, அனைத்து கல்விக் கடன்களும் 15 மார்ச் 2024 நிலவரப்படி செலுத்தப்படாத வட்டி உட்பட நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

இடஒதுக்கீடு உச்ச வரம்பு: இதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு என்பது அனைத்து சமுதாயத்தினருக்கும் விரிவு செய்யப்படும். அரசு வேலைகளில் ஒப்பந்த முறை முழுமையாக ஒழிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஏழை குழந்தைகள் முறையாக பள்ளிக்கூடம் செல்வதை கண்காணிக்க தனி அமைப்பு உருவாக்கப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கப்படும்.

கல்வி கொள்கையில் திருத்தம்: பாஜ அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கைக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, கல்வி கொள்கையில் மாற்றம் செய்யப்படும். சமூக நீதியை பரப்பும் வகையில் பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் பவன் மற்றும் நூலகங்கள் அமைக்கப்பட்டு படிக்கும் பழக்கம் அதிகரிக்க வைக்கப்படும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படும். தூய்மை பணியாளர்கள் வேலையின் போது உயிரிழந்தால் ரூ.30லட்சம் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாகுபாட்டை சந்திக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில் ரோஹித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும். எட்டாவது அட்டவணையில் கூடுதலான மொழிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மகப்பேறு விடுப்பு ஊதியம் அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் வழங்கப்படும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை வைத்து பரப்புரை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

* வங்கிகளின் கட்டண சுரண்டல் ஒழிக்கப்படும்
மகளிர் குழுக்களுக்கு வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். வங்கிகள் விதிக்கும் பல்வேறு கட்டண சுரண்டல் நிறுத்தப்படும். வாடிக்கையாளர்களின் சேவைக்கான நியாயமான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

* சீனாவிடம் மோடி இழந்ததை மீட்போம்
சீனா எல்லையில் நமது எல்லைகளில் அமைதியான கவனம் மற்றும் உறுதியுடன் பாதுகாப்பு தயார்நிலை. இழந்த பகுதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனாவுடனான நமது எல்லைகளில் முந்தைய நிலை நீடிக்க இரு படைகளும் ரோந்து சென்ற பகுதிகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சீனாவுடனான எங்கள் கொள்கையை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் தொடரும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் கிடையாது
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது. தேர்தலில் பழைய முறையே தொடரும். பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுஆய்வு செய்யப்படும்.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.

* ஆடை, உணவு சுதந்திரம்
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது விருப்பப்படி உடை உடுத்தவும், உணவு உண்ணவும் பேசவும் தனி சட்டங்களை பின்பற்ற இருக்கும் உரிமை உறுதிப்படுத்தப்படும்.

* பாஜவின் வாஷிங் மெஷினில் சுத்தமானவர்கள் சிக்குவார்கள்
கடந்த பத்து ஆண்டுகளில் பாஜ அரசு கொண்டு வந்த அத்தனை மக்கள் விரோத சட்டங்களும் திரும்பப் பெறப்படும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஊழல் குறித்து விசாரிக்கப்படும். பி.எம்.கேர்ஸ் ஊழல் குறித்து விசாரிக்கப்படும். ஊழல் வழக்குகளில் சிக்கி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர்கள் அவர்களது வாஷிங் மெஷினால் சுத்தமாக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் மீண்டும் விசாரிக்கப்படும்.

* 22 கோடி ஏழைகள் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும்
1990-91ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ. 25 லட்சம் கோடியாக இருந்தது. 2003-04ல் ரூ. 50 லட்சம் கோடி மதிப்பை எட்டியது. 2013-14ல் ரூ. 100 லட்சம் கோடியாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் பொருளாதாரம் மீண்டும் இரட்டிப்பாகி இப்ேபாது ரூ.200 லட்சம் கோடியாக இருந்திருக்கும். ஆனால் மோடி ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் ரூ. 173 லட்சம் கோடியை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும். மோடி அரசின் மோசமான கொள்கைகளால் இந்திய மக்கள் பொருளாதார அடிப்படையில் மிகப் பெரிய பணக்காரர், கணிசமான நடுத்தர வர்க்கம், ஏழை வர்க்கம் என பிரிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 22 கோடி மக்கள் ஏழைகளாக உள்ளனர். வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 22 கோடி மக்களை அடுத்தக் கோட்டிற்கு மேலே உயர்த்துவதை காங்கிரஸ் உறுதி செய்யும்.

* 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
ஒன்றிய அரசின் ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காலியிடங்களின் விவரங்கள் வௌியிட்டு தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப காலக்கெடு நிர்ணயிக்கப்படும். அக்னிபாத் திட்டத்தை ஒழித்து மீண்டும் சாதாரண ஆட்சேர்ப்பை தொடங்கப்படும். சுரங்க உற்பத்தி கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தப்படும். கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் திறமையற்ற மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு 1.5 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். குறைந்த கல்வி, திறன் குறைந்த இளைஞர்களுக்கு ேவலை வழங்க நீர்நிலைகள் சீரமைத்தல் மற்றும் தரிசு நில மறுஉருவாக்கம் திட்டம் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி நிறுவனம் மூலம் 18 முதல் 29 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால படிப்புகள் மூலம் திறன்பயிற்சி வழங்கப்படும். பஞ்சாயத்து அளவில் வேலைகள் உருவாக்கி பணிகள் வழங்கப்படும்.

The post நீட் தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ஜிஎஸ்டி, இடஒதுக்கீடு உச்சவரம்பு ரத்து; அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீதம்; 30 லட்சம் பேருக்கு அரசு வேலை; கல்விக்கடன் தள்ளுபடி; மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில் சலுகை; காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அசரவைக்கும் வாக்குறுதிகள் appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,EU ,Puduwa, Kashmir ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...