×

அண்ணாமலை சிறைபிடிப்பு: அதிமுக வேட்பாளர், எம்எல்ஏ மறியல்: வேறு ஒரு காரில் தப்பியோட்டம்

சூலூர்: கோவையில் பாஜ சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் களம் இறங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையை அடுத்த சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரு தரப்பினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சூலூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று இரவு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியில் பாஜ வேட்பாளர் அண்ணாமலை பிரசாரத்துக்கு வந்தார். அவருடன், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுந்து வந்தன. இதில் ஒரு கார், அதிமுகவின் பிரசார வாகனத்தை உரசிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் அந்த வாகனத்தை துரத்தினர். அப்போது, பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அந்த வழியாக வந்த அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்தனர்.

அதிமுக வாகனத்தின் மீது உரசி, சேதம் ஏற்படுத்திய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், வி.பி.கந்தசாமி எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நிலைமையை உணர்ந்த அண்ணாமலை, அந்த வாகனத்தில் இருந்து, சட்டென கீழே இறங்கி, ஒருசில நொடிகளில், வேறு ஒரு காரில் ஏறி, அங்கிருந்து புறப்பட்டு விட்டார். ஆனாலும், அதிமுகவினர் சாலைமறியல் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, அங்கு சூலூர் போலீசார் விரைந்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுகவினரின் வாகனத்தின் மீது உரசி, சேதம் ஏற்படுத்திச்சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பிறகே, அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

The post அண்ணாமலை சிறைபிடிப்பு: அதிமுக வேட்பாளர், எம்எல்ஏ மறியல்: வேறு ஒரு காரில் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,MLA ,Sulur ,BJP ,Coimbatore ,Singhai Ramachandran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...