×

நாளுக்கு நாள் வாட்டி எடுக்கும் கோடை வெப்பம்: ‘குளுகுளு’ ஜூஸ் பருகலாமா?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் என 4 மாதங்கள் கடும் கோடை வெயில் காணப்படும். இந்த 4 மாதங்களில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். காலநிலை மாறுபாட்டால் ஒவ்வொரு முறையும் மழைக் காலங்களில் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதேபோல் வெயில் காலங்களிலும் அளவுக்கு அதிகமான வெயில் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்காக பல நாடுகள் ஒன்று சேர்ந்து காலநிலை மாறுபாட்டை எவ்வாறு எதிர்கொள்வது, ஏன் இவ்வாறு இயற்கை மாறி வருகிறது என்பது குறித்து பல கட்ட ஆராய்ச்சிகளை நடத்தினர். பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகளில் புவி வெப்பமயமாவதால் பூமியில் வெப்பம் அதிகரிப்பதாகவும், பனி பிரதேசங்கள் உருகி வருவதால் ஆண்டுகள் செல்லச் செல்ல கடும் பின் விளைவுகள் ஏற்படும் எனவும் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு மாறிவரும் நவீன தொழில்நுட்பங்களும் ஒரு காரணம். அதே நேரத்தில் அவற்றை கையாளும் மனிதர்களும் ஒரு காரணம் என்று கூறலாம். காடுகள், மரங்கள் இவற்றை அழித்து கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதனால் போதிய மழை இல்லாமல் ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளிலும், அதே நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியும் ஏற்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை நம்மிடம் உள்ள பொருட்களை வைத்து நம்மை காத்துக் கொள்ளலாம் என பலரும் நமக்கு பல்வேறு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர். அந்த காலகட்டத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு வழிமுறைகளை நாம் மறந்து நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்தது ஒரு மிகப்பெரிய தவறு என மருத்துவர்கள் அவ்வப்போது எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த கோடை காலத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ டாக்டர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ‘‘சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் காரணமாக அதிகமாக நமது உடலில் வியர்வை ஏற்படுகிறது. இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு வைட்டமின் குறைபாடுகள் ஏற்பட்டு உடலுக்கு அது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நாம் எண்ணெய், காரம், மசாலா உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை தவித்து, சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நீர் சத்தை அளிப்பதால் அவற்றை சாப்பிடலாம். பொதுவாக கோடை காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிப்பழம், வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றை சாப்பிடலாம். பழங்களை அப்படியே எடுத்துக் கொண்டால் நல்லது. அதனை ஜூஸ் செய்து சாப்பிடும் போது அதில் சர்க்கரை மற்றும் கெமிக்கல்கள், ஐஸ் போன்றவை கலக்கப்படுவதால் பழங்களில் நன்மை பயக்கும் குணங்கள் மாறிவிடுகிறது. எனவே இயற்கையான பழங்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளை பொறுத்தவரை சவ்சவ், பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற நீர் உள்ள காய்கறிகளை சாப்பிடலாம். தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றால் கோதுமை சார்ந்த உணவுகள், சிக்கன், அன்னாச்சி பழம், தயிர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். கூழ் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் உஷ்ணமாவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெயிலில் செல்லும் போது வெள்ளை நிற உடைகளை பயன்படுத்தலாம்.

குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வெளியிடங்களில் பழச்சாறுகளை சாப்பிடும்போது அதில் ஐஸ் போடாமல் குடிக்க பழக வேண்டும். எதுபோன்ற தண்ணீரில் இருந்து ஐஸ் தயாரிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதனால் பழச் சாறுகளை பருகும்போது ஐஸ் போடுவதை தவிர்ப்பது நல்லது.முடிந்தவரை வீட்டிலிருந்து வெளியே சென்று வந்த பிறகு சாதாரண தண்ணீரில் உடலை குளிர்விப்பது நல்லது. ஒரு நாளைக்கு முடிந்தவரை 3 முறை சாதாரண நீரில் குளித்தால் உடல் உஷ்ணமாவதை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.

* பழைய சோறு மகிமை
நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்த அருமையான உணவு முறைகளில் பழைய சோறும் ஒன்று. அந்த காலகட்டத்தில் விவசாயத்திற்கு செல்பவர்கள் முந்தைய நாள் சாப்பாட்டை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை பச்சை வெங்காயத்துடன், தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவதால் உடல் குளுமை அடைந்து ரத்த ஓட்டம் சீராவதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது பெரிய ஓட்டல்களில் கூட பழைய சோறு என்ற ஒரு சாப்பாட்டை அவர்களது மெனுவில் சேர்த்துள்ளனர். அந்த அளவிற்கு பழைய சோறு மீண்டும் டிரெண்டிங் ஆகி வருகிறது. எனவே வீட்டில் உள்ள ஒரு சிறிய மண் சட்டியில் முந்தைய நாள் சாப்பாட்டை தண்ணீரில் கலந்து வைத்து மறுநாள் சாப்பிடும் போது சிறிது வெந்தயம், தயிர், சின்ன வெங்காயம் கலந்து சாப்பிட்டால் கோடைகாலத்தில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் குளிர்ச்சியை தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* நல்ல தண்ணீர் அவசியம்
பெரம்பூரை சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், கோடை காலத்தில் உடலில் வறட்சி ஏற்பட்டு கிட்னியில் கற்கள் உண்டாகும். இதனால் கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகளவில் ஏற்படும். இதை தவிர்க்க பொதுமக்கள் நல்ல தண்ணீரை குடிக்க வேண்டும். அதிகளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

மேலும் கோடையில் அம்மை போன்ற நோய்களும் ஏற்படும். இதனை தவிர்க்க உடல் உஷ்ணமாவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும் ஏசியில் அதிக நேரம் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை தவிர்த்து நீர்ச் சத்துள்ள காய்கறி மற்றும் பழங்களை உட்கொண்டால் கோடைகால பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என தெரிவித்தார்.

The post நாளுக்கு நாள் வாட்டி எடுக்கும் கோடை வெப்பம்: ‘குளுகுளு’ ஜூஸ் பருகலாமா? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு