×
Saravana Stores

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

ஜென் Z தலைமுறையின் சிக்கல்கள்!

*இப்ப உள்ள பசங்க யாரும் யாரையும் மதிப்பதில்லை.
*இப்ப உள்ள பசங்க யாரும் படிக்க விரும்புவதில்லை.
*இப்ப உள்ள பசங்க யாரும் உழைப்பைப் பற்றி யோசிப்பதில்லை.
*இப்ப உள்ள பசங்க யாரும் பணத்தை மிச்சம் பண்ண யோசிப்பதில்லை.

இந்த மாதிரி இன்றைய தலைமுறை டிஜிட்டல் யுக குழந்தைகள் முதல் வளர்ந்த பசங்க வரை அனைவரையும் திட்டித் தீர்க்கிறார்கள் நம் மக்கள். என்னதான் இந்தப் பசங்க எதிர்காலத்தில் செய்யப் போறாங்களோ என்ற பயம் வேறு இருக்கிறது அதீதமாக பெற்றோர்களும் பயப்படுகிறார்கள். யார் தான் இவர்கள் என்றால், 1996 – 2012க்குள் பிறந்தவர்களை Generation Z என்கிறார்கள். இவர்கள் அனைவரும் டிஜிட்டல் உலகத்துக்குள் இருந்தே பெரும்பாலானவற்றை வாங்கி விடுகிறார்கள். யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆன்லைனில் ஆர்டர் போட்டுவிட்டு, பொருட்கள் டெலிவரி ஆகும் போது தான் வீட்டிற்கு தெரிய வருகிறது.

அதனால் இவர்களுக்கும் மில்லினியம் மக்களுக்கும் இடையே மவுனப் போராட்டம் நடக்கிறது. இவர்களிடையே ஒரு நல்ல ஆரோக்கியாமான உரையாடல் எதுவும் உருவாக்க முடியவில்லை என்றே பெரியவர்கள் அனைவரும் வருத்தப்படுகிறார்கள். உண்மையில் இந்த Generation Z எதிர்கொள்ளும் சவால்கள்தான் என்னவென்று பார்ப்போம்.முதலாவதாக அவர்களின் ஒரு நாளின் ஆரம்பமே அவர்கள் மொபைலுடன்தான் தொடங்குகிறது. அதனால் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் சுறுசுறுப்புடன் இருப்பதில் ஒரு சோம்பேறித்தனம் ஏற்படுகிறது. ஒரு மொபைலில் வரும் உரையாடல் என்பது, காலையில் நண்பர்களுக்கு குட் மார்னிங் என்பதில் ஆரம்பித்து, தெரிந்தவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதும், அடுத்ததாகத் தெரிந்தவர்களுக்கு முடியவில்லை என்றால் டேக் கேர் என்று கூறுவதும், அடுத்ததாக யாராவது இறந்து விட்டால், ஆழ்ந்த இரங்கல் என்று கூறுவதுமாக இருக்கிறது.

இந்தத் தலைமுறையினருக்கு எல்லா உணர்வுகளையும் எழுத்துகளாக டைப் பண்ணி முடித்து விடுவதே போதுமானதாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு மேலே சொன்ன அத்தனை உரையாடலிலுள்ள எந்த உணர்வுடனும் முழுமையாக ஒன்ற முடிவதில்லை என்பதே வருத்தமான செய்தியாகும். இப்படி வெறும் எழுத்துகளை கடத்துவதிலுள்ள ஆர்வம், மனிதர்களுடன் இயல்பான உரையாடலை தக்க வைக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசும் போக்கு தான் அதிகமாக இருக்கிறது.

யாராக இருந்தாலும், வயது வித்தியாசமின்றி நான் மொபைலில் பேசி விட்டேன் என்பதும், நான் மெசேஜ் போட்டு விட்டேன் என்பதும், போன தலைமுறை மக்களுக்கு புதுமையாக இருக்கிறது. அதோடு, பெரியவர்கள் தங்களுக்கான மரியாதை கிடைக்கவில்லை என்றும், நேரில் சந்தித்து பேசி, கையைப் பிடித்து உரையாடுவதே ஒரு நல்ல ஆரோக்கியமான உறவை பல ஆண்டு காலம் தக்க வைக்கும் என்பதே ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்த மொபைல் இருப்பதால், சிறு சங்கடங்கள் உறவுக்குள் வந்தாலும் ஒரே ஒரு பிளாக் பட்டனை தட்டி விட்டு, ஒட்டு மொத்தமாக விலகி விடுகிறார்கள். அதில் எந்தவித குற்ற உணர்வும் இருப்பதில்லை என்பது தான் அதிர்ச்சிகரமான மாற்றமாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

இரண்டாவதாக சோசியல் மீடியாவில் இருக்கும் செலிபிரிட்டிகளின் வார்த்தைகளை அச்சுப் பிசிராமல் கேட்பதாக இருக்கிறது. உதாரணத்துக்கு சாகசப் பயணம் செய்வதற்கு யூடியூபில் பிரபலமாக இருக்கும் டி.டி.எப். வாசனை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால்தான் வாசனை காவல்துறை கைது செய்தாலும், அந்த இளைஞரின் ஆதரவாளர்களில் இருந்து நம் சமூக இளைஞர்கள் வரை அந்த சாகச பயண நபருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.

இங்கு எல்லாமே சட்டத்தின் மேற்பார்வையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்துக்கு எதிராகச் செய்யும் தனிநபரின் செயலை பொது மக்கள் யாருமே ஆதரிக்க மாட்டார்கள். இங்கு காவல் துறையும், சட்டமும் அந்த நபரைக் கைது செய்து, தண்டனை கொடுத்தாலும், அதைப் பற்றிய சிறிதளவு விழிப்புணர்வு கூட இல்லாமல் ஆதரவாக பேசும் இளைஞர்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. அதாவது நாம் வசிக்கும் வீட்டிலிருந்து சமூகம் கட்டமைக்கும் அனைத்து இடங்களிலும் தனி நபரின் சந்தோஷமே முக்கியம் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இவை எல்லாமே ஒரு சிறு உதாரணங்கள் தான். ஏனென்றால் நம் இந்தியச் சமூகத்தில் என்றைக்கு தனிநபரின் சுதந்திரம் முக்கியம் என்று பார்க்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இந்தியப் பிரஜை என்றுமே சமூகத்திற்கும், தனக்கும் தீங்கிழைக்காத சுதந்திரத்தை பேணிக்காக்க வேண்டுமென்பதே அடிப்படை கடமையாகப் பார்த்தார்கள். இன்று நிலைமை தலைகீழாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய தேவையும், தன்னுடைய சுதந்திரமும் முக்கியம் என்பதே உரக்கச் சொல்கிறார்கள்.

அதற்காக நம் வாழ்க்கையில் எல்லாமுமாக இருப்பவர்களைக் கூட இழக்கத் தயாராகி விட்டார்கள். யாரெல்லாம் நம்மைக் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களை எல்லாம், துட்சமாக நினைத்து தூக்கி எறிகிறார்கள். அப்படி கண்மூடித்தனமாக செய்வதற்கு அனைத்து போதைப் பொருட்களும் அவர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது.

மூன்றாவதாக போதைப் பொருளின் பிடியில் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று ஒட்டு மொத்த தேசமும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் சொன்னது, பாப் பாடகர் பாப்மார்லி என்பவர் ஒரு நல்ல புரட்சியாளர் மற்றும் பாடகர். அவை எல்லாவற்றையும் மீறி அவர் அதிகமாக உட்கொண்டது போதைப் பொருட்கள் தான் என்று மாணவர்கள் கூறுகிறார்கள். அதனால் மாணவர்களும், அவருடைய பாடல்களைப் பின்பற்றிக் கொண்டும், போதைப் பொருட்கள் ஒரு தவறான விஷயமல்ல என்று தைரியமாக வெளியே சொல்கிறார்கள். உண்மையில் இப்படி பேசுவதற்கு அவர்களின் சிந்தனைத் திறன் அந்தளவிற்கு தான் இருக்கிறது. காட்சி ஊடகங்களும், போதைப் பொருட்களும் சேர்ந்து அவர்களின் சிந்தனையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைய வைக்கிறது.

இதனால் தன்னைப் பற்றி அதிகமாக யோசிக்கும் எண்ணங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அந்த எண்ணங்களினால் அவர்களைச் சுற்றியிருக்கும் குடும்பமும், உறவினர்களும், சமூக மக்களும் முற்றிலும் மறைந்து விடுகிறார்கள். எப்பொழுதுமே மூளைக்குள் சந்தோச உணர்வைத் தரக்கூடிய டோபமைன் இருந்தாலே போதும் என்று மூளைக்கு கட்டளையிடுவார்கள். மூளைக்கு கவலையை உணர்த்தும் செரோட்டனின் கெமிக்கல் வேண்டாம் என்றே இனி சொல்ல ஆரம்பிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

நான்காவதாக சந்தோச உணர்வைத் தரக்கூடிய டோபமனை அதிகரிக்கவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் உலகில் அனைத்தும் இருக்கிறது. ஆனால் அதை வாங்குவதற்கு பணத் தேவை அதிகமாக உள்ளது. அதனால் அடுத்ததாக பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்கவும் ஆசைப்படுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் டிஜிட்டல் மூலம் முப்பது வயதுக்குள் குறைந்தது மூன்று விதமான வேலைகளை செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

அதனால் ஒரு தொழில் பணம் தராவிட்டாலும், அடுத்த தொழிலில் இருந்து பணம் வர வைக்க பார்க்கிறார்கள். இதனால் எந்த வேலையும் சரியாக கற்றுக் கொள்ளாமல், அடிக்கடி பல வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை அவர்களாகவே உருவாக்கி விடுகிறார்கள். எல்லாமே அந்தந்த நேரத்து தற்காப்பு வேலைகள்தான் தவிர, நிரந்தரமான வேலையென்று எதுவுமில்லை. அப்படி வேலையில்லாத சமயத்தில் ஆன்லைனில் கடன் வாங்குவதும், பெற்றோர்களுக்குத் தெரியாமல் பொருட்களை விற்பதும், சின்ன சின்னப் பொருட்களை திருடுவதுமாக இருக்கிறார்கள். ஒரு நாள் இம்மாதிரியான விஷயங்கள் தெரிய வரும் போது, நம் வீட்டுப் பிள்ளை தான் இப்படி செய்தானா என்று பெற்றோர்கள் முதல் உறவினர்கள் வரை திகைக்கிறார்கள்.

இப்படியாக பொருளாதாரத் தேவையாக இருந்தாலும் சரி, போதைப் பொருளாக இருந்தாலும் சரி, சுதந்திரமாக இருந்தாலும் சரி அனைத்தையும் அவர்களுக்கேற்ற வகையில் கிடைக்கும் சூழலில் இருக்கிறார்கள். இதனால் அவர்களிடையே ஒரு ஒழுங்குத் தன்மை குறைவாகவும், தெளிவாக சிந்திக்கும் முறையும் குறைவாக இருக்கிறது. இந்த ஒழுங்கும், சிந்தனையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகங்கள், காவல் மற்றும் சட்டத்துறை வரை பெரும் சவாலாக இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் சரி செய்ய இங்கு யாரோ ஒருவரை மட்டும் கை நீட்டி பொறுப்பை தள்ளி விடக் கூடாது. ஒரு மனிதன் என்பவன் சமூகத்திற்கானவன். அதனால் ஒரு மனிதனின் நிறை குறை என்பதை அனைவரும் சேர்ந்து தான் பொறுப்பெடுத்து சரி செய்தாக வேண்டும்.மனிதனுக்கு என்றுமே புதுப்புது விஷயங்கள் மீது தீராத் தேடல் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த தேடல் தான், இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு சிறு வரைமுறையை தங்களுக்குத் தானே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இன்று அந்த வரைமுறையை யாரும் சொல்ல விரும்பவதுமில்லை, தங்களுக்கு வரைமுறை வைப்பதே பெரிய குற்றமாகப் பார்க்கிறார்கள்.

அதைத்தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்க வேண்டும்.எந்தவொரு விஷயம் செய்தாலும், அதில் சுதந்திரம் என்பதை விட, ஒரு கட்டுப்பாட்டுடன் நம் நடவடிக்கைகள் இருந்தாக வேண்டுமென்ற உறுதிமொழி தான், அவர்களை நிதானமாக இருக்க வைக்கும். அதற்கான விழிப்புணர்வு தான் சமூகத்திலுள்ள ஒவ்வொரு துறையினரும் சேர்ந்து செய்ய வேண்டும்.

எத்தனை பெரிய சவால்கள் இருந்தாலும், மனிதர்கள் என்றுமே சக மனிதனின் அன்புக்கும், பாராட்டுக்கும் ஏங்குவார்கள். எழுத்தாளர். ஜெயகாந்தன் அவர்கள் சொல்வது போல், நாகரிகம் என்ன வளர்ந்தாலும், மனிதனின் உணர்வுகள் என்றுமே மாறாது. அந்த உணர்வின் பிடி இருக்கும் வரை, மனிதர்கள் தங்களுக்குள் ஒரு உறுதிமொழி எடுத்து, சமூகத்திற்கான நபராக மாறுவார்கள். அதுவே இன்றைய தலைமுறைகளின் சவாலை நாம் சரியாக்க முடியும் என்ற நம்பிக்கை நம் கைக்குள் இருக்கிறது. அதுவே நமக்கும் போதுமானதாக இருக்கிறது.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi Gen ,
× RELATED பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்!