×

குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் மிரட்டல் எதிரொலி அமித்ஷா தமிழகம் வருகை மீண்டும் ரத்து

நாடு முழுவதும் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால், தமிழக பாஜவில் ஆரம்பம் முதலே அனைத்துவிதமான பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாஜ தலைமையில் மெகா கூட்டணி அமைக்க வேண்டுமென்ற அமித்ஷாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிமுக, தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லாமல் விலகிச் சென்றன. இதனால் பாமகவை தவிர்த்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கூட்டணி கட்சிகள் இல்லாததால் தமிழ்நாட்டில் பாஜ கூட்டணி பலமிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தகவல்கள் சென்றுள்ளன.

பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவது சிரமம் என்ற தகவலை உளவுத் துறை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஏப். 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்களில், அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கையில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ உட்பட பிரசாரம் மேற்கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அமித்ஷாவிற்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி மதுரை உள்ளிட்ட 3 மாவட்ட பிரசாரம் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு உளவுத்துறையின் எதிர்மறையான அறிக்கை காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வரும் அமித்ஷா, இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, கார் மூலம் சிவகங்கை சென்று பாஜ வேட்பாளர் தேவநாதன் மற்றும் தென்காசி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்றும், இதன் பிறகு இரவு நாகர்கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் பாஜ கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினரும் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பாஜ வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்லும் இடங்கள் குறைந்தளவு கூட்டம் கூட இல்லை. கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி சொந்த கட்சியினருக்கே கூட போதுமான ஒத்துழைப்பு இல்லை.

பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் பெயரளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது, கூட்டம் சேராதது, மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகள் யாரையும் பொருட்படுத்துவது இல்லை; மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல்களை உளவுத்துறை மூலம் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றதால் தனது பயண திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதேநேரத்தில் குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் குறித்து ஒன்றிய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் அவருக்கு இந்த முறை தேர்தலில் சீட் வழங்கக் கூடாது என்று எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்களது எச்சரிக்கையை மீறி ஒன்றிய அமைச்சருக்கு சீட் வழங்கப்பட்டது. குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் ராஜபுத்திரர் சமூகத்தினர் செல்வாக்காக உள்ளனர். இதனால் அவர்கள் பாஜவுக்கு எதிராக களம் இறங்கிவிட்டனர். வேட்பாளரை வாபஸ்பெறாவிட்டால் எதிர்த்து வேலை செய்வோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் அவர்களை சமாதனாப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. இதனால், அமித்ஷா தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

The post குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் மிரட்டல் எதிரொலி அமித்ஷா தமிழகம் வருகை மீண்டும் ரத்து appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamil Nadu ,Rajput ,Gujarat ,BJP ,AIADMK ,DMDK ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்...