×

இடஒதுக்கீடு வேணும்னா கூட்டணி வை என்றார்: எடப்பாடி ஒரு வியாபாரி; அன்புமணி கடும் தாக்கு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து, தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று முன்தினம் இரவு பொதுகூட்டம் நடந்தது. கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோர் சவுமியாவுக்கு ஆதரவு திரட்டி பேசினர். அப்போது அன்புமணி பேசியதாவது: பாமக வேட்பாளர் சவுமியா பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதல் ஆளாக நிற்பவர் சவுமியா. பெண்களுக்கு பிரச்னை என்றால், அவர் பத்ரகாளியாக மாறி விடுவார்.

நாங்கள் துரோகம் செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நாங்கள் என்ன துரோகம் செய்தோம். உங்களுக்காக நாங்கள் உழைத்தோம். நாங்கள் தியாகம்தான் செய்தோம். அந்த தியாகத்தால் அவர் 2 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். அவர் ஒரு வியாபாரி. சமூகநீதி இடஒதுக்கீடு பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை.

நீங்கள் தானாக முன்வந்து இடஒதுக்கீடு கொடுத்தீர்களா? நாங்கள் போராட்டம் நடத்தி பெற்றோம். அதுவும் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில், அன்று மாலை அழைத்து கையொப்பம் கேட்டார்கள். கையெழுத்து போட்டால்தான், இடஒதுக்கீடு கொடுப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போது ராமதாசுக்கு கோபம் வந்து, வெள்ளை பேப்பரில் கையெழுத்தே போட்டு தருகிறேன்.

சீட்டே வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் என ஜி.கே. மணியிடம் தெரிவித்தார். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக கொடுத்ததால், நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவில் 5 பேர் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சராக இருந்தார்கள். அவர்கள் யாரும் இட ஒதுக்கீடு கொடுக்கச் சொல்லி கேட்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post இடஒதுக்கீடு வேணும்னா கூட்டணி வை என்றார்: எடப்பாடி ஒரு வியாபாரி; அன்புமணி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Anbumani ,Dharmapuri Vallalar Thidal ,BAM ,Soumya ,Dharmapuri ,PAMA ,Dr. ,Ramadoss ,president ,Sowmiya ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்