×
Saravana Stores

கச்சத்தீவை கொடுக்க கலைஞர் ஒப்புக்கொள்ளவில்லை: மோடிக்கு ‘செலக்டிவ் அம்னீசியா’ இலங்கையுடன் ரகசிய உறவு: அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா என்ற வியாதி இருக்கிறது என்று ஏற்கனவே கூறியதை போல பத்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கும்போது பிரதமர் மோடி கச்சத்தீவை மறந்து விட்டார். அவர் ஆட்சியில் இருக்கும் போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவை கொடுக்க முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒப்புக்கொண்டார் என்று அண்ணாமலை கூறுகிறார்.

ஆனால் எந்த இடத்திலும் கலைஞர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் சிறந்த ராஜதந்திரி. அரசியல் சாணக்கியன் என்பது நாடறிந்த உண்மை.  கச்சத்தீவை பற்றி பேசவைத்த ஒன்றிய அரசு குழுவினரிடம் இரண்டு ஆண்டு காலம் இந்த பிரச்னையை ஒத்தி போட முடியுமா என்று தான் கேட்டாரே தவிர தமிழ்நாடு அரசு சார்பில் அவர் சம்மதம் தெரிவித்ததாக எந்த இடத்திலும் ஆதாரம் கிடையாது. கச்சத்தீவின் வருவாய் ஆவணம் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானதாக இருக்கிறது. ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் அது சொந்தம்.

இந்திய அரசாங்கம் அதை தாரை வார்த்து கொடுத்திருந்தால் கூட அது தவறான ஒன்றுதான். இன்னொருவர் சொத்தை எடுத்து கொடுத்துள்ளது. ஆனால் அவர் எதிர்ப்பு செய்திருந்தால் தான் இந்திய அரசு கொடுத்தது தப்பா இல்லையா என்று தெரியவரும். ஆனால் அவர் அன்று இந்திய அரசு கொடுக்கும்போது என்னுடைய உரிமை என்று கூறவில்லை. இன்று அவர் நினைத்தால் உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இது இரண்டு நாட்டின் பிரச்னை. இங்கு இருக்கக்கூடிய நீதிமன்றத்தை விட நெதர்லாந்தில் இருக்கக்கூடிய உலக அமைதிக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

அதில் இரண்டு நாடுகளையும் கட்சிக்காரர்களாக சேர்த்து ராமநாதபுரம் ராஜா இந்த இடம் தனக்கு சொந்தம் என்றும், தனக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்து வாதாடுவதற்கான சட்ட ஆதாரம் உள்ளது. வெற்றி தோல்வி என்பது வேறு. ஆனால் இதில் வழக்கு போடுவதற்கான முகாந்திரம் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்பது எங்களது லட்சியம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் நிச்சயம் சட்ட நிபுணர்களோடு கலந்து பேசி ராமநாதபுரம் ராஜாவுக்கோ அல்லது அங்கு உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். அதனால் ஏதோ ஒரு வகையில் கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கும். ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து இலங்கை -இந்தியா உறவை பாதிக்கும்படி அவர் பேசவில்லை.

கச்சத்தீவு விவகாரத்தில் எதிர்க்கட்சியினரை குற்றம் சுமத்துவதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று பேசினார். இந்தியா -இலங்கை உறவு என்பது அவர்களுக்குள் உண்டான ரகசிய உறவு. அந்த உறவை விட்டுக் கொடுக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. அதனால்தான் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு பொறுப்பு ஒன்றிய அரசுதான். இவ்வாறு அவர் கூறினார்.

The post கச்சத்தீவை கொடுக்க கலைஞர் ஒப்புக்கொள்ளவில்லை: மோடிக்கு ‘செலக்டிவ் அம்னீசியா’ இலங்கையுடன் ரகசிய உறவு: அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Kachatheave ,Modi ,Sri Lanka ,Minister ,Raghupathi Kattam ,Law Minister ,Raghupathi ,Pudukottai ,Kachchathivi ,Sri ,Lanka ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை