×

தங்கம் விலை புதிய உச்சம் சவரன் ரூ.52,360 ஆக உயர்ந்தது: மார்ச் 1 முதல் நேற்று வரை ரூ.5,640 எகிறியது, ஒன்றிய அரசு வரியை குறைக்க மக்கள் கோரிக்கை

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து சவரன் ரூ.52,360 ஆக புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மார்ச் 1 முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.5,640 விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் ஒன்றிய அரசு வரியை குறைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது.

அதன் பிறகு அதிரடியாக உயர்ந்து 29ம் தேதி ஒரு சவரன் 51 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.51,120க்கு விற்பனையானது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,560க்கு விற்கப்பட்டது.  இந்நிலையில் மறுநாள் பெயரளவுக்கு குறைந்து சவரன் ரூ.51,440க்கு விற்கப்பட்டது. அதேசமயம் மறுநாளே, அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரம் ஆனது.

இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,545க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் ஏற்கனவே இருந்த உட்சபட்ச விலை அனைத்தையும் முறியடித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் கடந்த மார்ச் 1 முதல் நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,640 வரை உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை குறைய ஒன்றிய அரசு அதன் இருப்பை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி வரியை குறைக்க வேண்டும், கச்சா எண்ணெய் விலை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கருப்பு பண முதலைகள் பெருமளவில் தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். அப்போது தான் தங்கம் விலை குறையும். தேர்தல் நேரத்தில் தங்கத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசாமல் இருந்தால் பொதுமக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகிவிடும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

The post தங்கம் விலை புதிய உச்சம் சவரன் ரூ.52,360 ஆக உயர்ந்தது: மார்ச் 1 முதல் நேற்று வரை ரூ.5,640 எகிறியது, ஒன்றிய அரசு வரியை குறைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Savaran ,Union government ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...