×

காலை சிற்றுண்டி திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் காமராஜருக்கு கிடைத்த புகழ் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைக்கும்: தென்சென்னை பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேச்சு

சென்னை: காலைச் சிற்றுண்டித் திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும். அப்போது, காமராஜருக்கு கிடைத்த புகழ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைக்கும் என்று தென்சென்னை பிரசாரத்தில் ப.சிதம்பரம் கூறினார். தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று மாலை மயிலாப்பூர் மாங்கொல்லையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ஒன்றிய பாஜ அரசு மக்களுக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் 3வது முறையாகப் பிரதமராக வாய்ப்பு தாருங்கள் என்கிறார் மோடி. எந்தக் காலத்திலும் இல்லாத அளவு வேலையின்மை உயர்ந்துள்ளது. நாட்டில் 83 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை. விலைவாசி உயர்வு விஷம் போலக் கொட்டுகிறது.

பாஜவினர் 10 ஆண்டுகளில் முத்தான திட்டங்கள் என்று எதையாவது செய்திருக்கிறார்களா? ஆனால் 3 ஆண்டுகளில் நாங்கள் (திமுக அரசு) என்னென்ன செய்திருக்கிறோம் தெரியுமா? 1.15 கோடி மகளிருக்கு மாதா மாதம் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்- கூண்டுக் கிளிகளுக்கு சிறகு அளிக்கப்பட்டிருக்கிறது. நம் பெண்களும் ஆட்சியராக புதுமைப் பெண் திட்டம். இந்த வகையில் 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 அளிக்கப்படுகிறது.

காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்ததைப் போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இது ஏன் பிரதமருக்குத் தோன்றவில்லை? எழுதி வைத்துக் கொள்ளுங்கள், காலைச் சிற்றுண்டித் திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும். அவ்வாறு காமராஜருக்குக் கிடைத்த புகழ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைக்கும். இப்படி திமுக அரசின் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மக்கள் அனைவரும் அலசிப் பார்த்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். என்றார். பின்னர்,மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தங்க சாலை அரசு அச்சகம் அருகிலும். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம் அருகேயும், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றம் பேருந்து நிலையம் அருகேயும் பிரசாரம் செய்தார்.

The post காலை சிற்றுண்டி திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் காமராஜருக்கு கிடைத்த புகழ் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைக்கும்: தென்சென்னை பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,M.K.Stalin ,P. Chidambaram ,South Chennai ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,South Chennai Constituency ,DMK ,Tamilachi Thangapandiyan ,Congress ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...