×

இன்று வௌியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: பெண்கள், மாணவர்கள் பிரச்னைகளில் சிறப்பு கவனம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தொடர்பான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வௌியிடுகிறது. நாடு முழுவதும் 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கு வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வௌியாகும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பல முக்கிய பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் தேர்தல் அறிக்கை. தேர்தல் அறிக்கையை தயாரிக்க ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் குழு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கையை தயாரித்து முடித்தது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது நாட்டு மக்கள் அவரிடம் முன்வைத்த பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு குறு தொழில் செய்வோர், மாணவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி வௌியிட இருக்கும் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இன்று வௌியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: பெண்கள், மாணவர்கள் பிரச்னைகளில் சிறப்பு கவனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,Congress party ,Lok Sabha elections ,Lok Sabha ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...