×

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லையென்று கூறி ஏழைகளிடம் ரூ.21,000 கோடி கொள்ளை: மோடி அரசின் டிஜிட்டல் வழிப்பறி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: வங்கியில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லை என ஏழைகளிடம் இருந்து ரூ.21 ஆயிரம் கோடியை வங்கிகள் கொள்ளை அடித்துள்ளன. ‘புதிய இந்தியா’வில் மோடி அரசின் டிஜிட்டல் வழிப்பறி இது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு,

அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி. இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவக்கியதை பாஜ பெரும் சாதனையாகக் குறிப்பிட்டு வருகிறது. ஆனால், வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் அப்பாவி வாடிக்கையாளர்களிடம் ரூ.21,000 கோடியை வங்கிகள் வசூலித்துள்ளதை ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராட், நிதியமைச்சகம் வழங்கிய புள்ளி விவரத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காததற்கான அபராதம் மட்டுமின்றி, ஏடிஎம் பரிவர்த்தனை, எஸ்எம்எஸ் சேவைகளுக்காகவும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.

இவையெல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.35,000 கோடியை அப்பாவி வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூல் செய்துள்ளன. நிதியமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, ஐடிபிஐ, இன்டஸ் இண்ட், ஐசிஐசிஐ ஆகிய 5 பெரிய தனியார் வங்கிகள், 2018ல் இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.21,000 கோடி அபராதம் விதித்துள்ளன.

இதுபோல், மேற்கண்ட காலக்கட்டத்தில் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு 5 பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக மேற்கொள்ளலாம். அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும். இந்த வகையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டும் ரூ.8,000 கோடி. தவிர, எஸ்எம்எஸ் சேவைகளுக்காக வங்கிகள் ரூ.6,000 கோடி வசூல் செய்துள்ளன. ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதில் மிக முக்கிய நடவடிக்கையாக 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அன்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என அறிவித்தார். இதன்பிறகுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக மொபைல் மூலம் பணம் அனுப்ப யுபிஐ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறைகளால், மக்கள் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யத் துவங்கினர்.

ஆனால், பலரும் அறியாமலே வங்கிகளின் அபராதம் மற்றும் சேவை கட்டணங்களால் சேமிப்பு தொகையை இழந்தனர். டிஜிட்டல் இந்தியா என கூறிக் கொண்டு, அப்பாவி மக்களிடம் வங்கிகள் அபராதம் என்ற பெயரில் பணம் வசூலிக்கும் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்குவதாக அமைந்துள்ளது .

* ஜன்தன் கணக்கு காரணமா?
அனைவருக்கும் வங்கிக் கணக்கை இலக்காகக் கொண்டு பிரதமர் ஜன்தன் திட்டத்தின் கீழ் ‘ஜன்தன் வங்கிக் கணக்கு’ துவக்கப்பட்டது. ஜன்தன் இணைய தளத்தில் உள்ள தற்போதைய புள்ளி விவரத்தின்படி, மொத்தம் 51.95 கோடி பேர் இந்த திட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இவற்றில் மொத்தம் ரூ.232,502.22 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்த கணக்கு மூலம் தான் மானியங்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன.

ஆனால், குறைந்த பட்ச இருப்பு தொகைக்கான வங்கி அபராதம் குறித்து 2017 மார்ச் மாதம் விளக்கம் அளித்த அப்போதைய பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ‘‘தற்போது 11 கோடி ஜன்தன் கணக்குகள் உள்ளன. இவற்றைப் பராமரிப்பது வங்கிகளுக்கு பெரும் சுமையாக ஆகியுள்ளது. இவற்றை பராமரிக்க பணம் தேவை. இதை கருத்தில் கொண்டே கவனத்துடன் பரிசீலித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* உரிமை தொகையிலும் கைவைத்த வங்கிகள்
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்குகிறது. இந்த தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான கணக்குகளில் போடப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் எடுப்பதற்குள், அந்த பணத்தை வங்கிகள் அபராதமாக எடுத்து விடுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு வங்கி தரப்பில் மறுப்பு கூறப்பட்டாலும், பணம் இழந்த வாடிக்கையாளர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வறுமையை ஒழிக்க எங்களுக்கு செய்யும் நிதியுதவி எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லையே என்ற வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

* ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்
முன்பு வங்கி கணக்கு வைத்திருந்தவர்கள் மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து வந்தனர். ஆனால், ஏடிஎம் எண்ணிக்கை அதிகரிப்பால் அவற்றை கையாளுவதற்கான செலவை ஈடுகட்ட இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் 2014ம் ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தன.

இதைத்தொடர்ந்து இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது. பின்னர் 3ஆக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது வங்கிகள் இலவச பரிவர்த்தனைக்கு மேல் ரூ.21 மற்றும் வரி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. 2022 ஜனவரி 1ல் இந்த புதிய கட்டண உயர்வு அமலானது.

* டிஜிட்டல் பரிவர்த்தனையால் பாழாய்ப் போன சேமிப்பு
‘டிஜிட்டல் இந்தியா’ என்ற பெயரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும்போது மக்கள் பணத்தின் அருமை தெரிந்து பயன்படுத்தினர். இதனால், குடும்பச் செலவுகள் கட்டுக்குள் இருந்தன. தற்போது ஜிபே, போன் பே, பீம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது பெரிய தொகையாக இருந்தாலும் அது வெறும் நம்பராகத்தான் தெரிகிறது. கணக்குத் தெரியாமல் செலவு செய்வதால், சேமிப்பு தொகை கரைந்து விடுகிறது. இதனால் ‘சேமிப்பு கணக்கு’ என்பதே அர்த்தமற்றுப் போய் விட்டதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

The post வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லையென்று கூறி ஏழைகளிடம் ரூ.21,000 கோடி கொள்ளை: மோடி அரசின் டிஜிட்டல் வழிப்பறி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi government ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Tamil Nadu ,M.K.Stalin ,New India ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...