×

போலி பதிவு எண்ணில் சொகுசு கார் பறிமுதல்: இளம் தொழிலதிபரிடம் விசாரணை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ரூ.36 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று வெகு நேரமாக நின்று இருந்தது. இதை பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் சரவணன் என்பவர் பார்த்துள்ளார். உடனே சொகுசு காரின் அருகே சென்ற போது காரில் யாரும் இல்லை. இதனால் காரின் பதிவு எண் மூலம் உரிமையாளர் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது, எதிர் திசையில் பேசிய நபர், தான் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் ஹரிஸ் என்றும், எனது கார் தன்னிடம் தான் இருப்பதாகவும், அங்கு தனது கார் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காரில் போலி பதிவு எண் இருப்பதை அறிந்த போக்குவரத்து தலைமை காவலர் சரவணன், அண்ணாசாலை காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்படி உதவி ஆய்வாளர் மருது அந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். அப்போது, கே.கே.நகர் செந்தமிழ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஹரிகிருஷ்ணன் (26) என்பவரது கார் என்று தெரியவந்தது. ஹரிகிருஷ்ணன் அந்த காரை தேனியை சேர்ந்த அஜய் என்பவரிடம் அடமானத்திற்கு வாங்கியதாகவும், மற்றபடி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் விசாரணையில் தேனியை சேர்ந்த அஜய் என்பவர் சொகுசு காரில் போலி பதிவு எண்ணை பயன்படுத்தி, அதை அடமானம் வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து காரை அடமானம் வைத்த தேனியை சேர்ந்த அஜய் மீது ஐபிசி 419, 465, 468, 471, 420 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சொகுசு கார் பறிமுதல் செய்தனர். மேலும், சொகுசு காரை அடமானம் வைத்த அஜயை கைது செய்ய தேனி மாவட்டத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

The post போலி பதிவு எண்ணில் சொகுசு கார் பறிமுதல்: இளம் தொழிலதிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,LIC ,Annasalai, Chennai ,Saravanan ,Dinakaran ,
× RELATED கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி