- மயிலாடுதுறை
- வால்பாறை
- மயிலாடுதுறை
- தைநாடு செம்மங்குளம் வீதி
- மாநில காவல்துறை மற்றும் காடு
- மாவட்ட வனவிலங்கு
- டேனியல் ஜோச
- Valpara
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர் டேனியல் ஜோசப் தலைமையிலான வன அலுவலர்கள் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் வலைகளை எடுத்து வந்து செம்மங்குளம் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனாலும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. வீடுகளை விட்டு மக்கள் வெளியே யாரும் வர வேண்டாம் என்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி நேற்று மாலை செம்மங்குளம் பகுதிக்கு வந்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சிறுத்தையை விரைவில் பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி இருக்க அறிவுறுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செம்மங்குளத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் ஒரு பாழடைந்த கட்டிடம் மற்றும் கட்டிடத்தை சுற்றி மரங்கள் உள்ளது. இதில் ஒரு மரத்தில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் வனத்துறையினர் 15 பேர், தீயணைப்பு துறையினர் 25 பேர் மற்றும் போலீசார் இணைந்து 3 பிரிவாக பிரிந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் செம்மங்குளம் அருகே ஒரு கிமீ தொலைவில் உள்ள அறுபத்துமூவர்பேட்டை ஆரோக்கியநாதபுரத்தில் நெல் அறுவடை நேற்று முடிந்தது. அறுவடைக்கு பயன்படுத்திய இயந்திரத்தை அங்குள்ள கருவேலங்காடு அருகே நிறுத்தி விட்டு அதில் டிரைவர் உள்ளிட்டோர் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அந்த வழியாக சிறுத்தை நடந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர். சிறிது நேரத்தில் அருகில் உள்ள கருவேல காட்டுக்குள் சிறுத்தை விட்டதாம்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆரோக்கியநாதபுரத்துக்கு வனத்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தையின் காலடி தடங்கள் இருந்தது. இதையடுத்து வலைகளை எடுத்து கொண்டு கருவேல காட்டுக்குள் சென்று ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருவேலங் காட்டுக்குள் பொதுமக்கள் செல்லாதவாறு வனத்துறை சார்பில் கயிறு கட்டி தடுப்பு அமைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லுங்கள், தெருக்களில் யாரும் நடமாட வேண்டாம் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆரோக்கிநாதபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சிறுத்தையை பிடிக்க முத்துப்பேட்ைடயில் இருந்து வனத்துறையினர் வந்தனர். மேலும் வால்பாறையில் இருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி தேனி, மதுரையில் இருந்து கூண்டு மற்றும் சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கூறைநாடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் எழுதினர்.
ெசம்மங்குளம் முழுவதும் தெரு தெருவாக சென்று வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மரங்களில் ஏறி சிறுத்தை பதுங்கியுள்ளதா என்று சல்லடை போட்டு ேதடினர். ஆனால் நேற்று நள்ளிரவு செம்மங்குளத்தில் இருந்து ஆரோக்கியநாதபுரத்துக்கு சிறுத்தை இடம் பெயர்ந்துள்ளது.
ஏற்கனவே செம்மங்குளத்தில் மக்கள் பீதியில் உள்ள நிலையில் தற்போது ஆரோக்கியநாதபுரம் மக்களும் அச்சத்துடன் உள்ளனர். மயிலாடுதுறையில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை போக்கு காட்டி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post மயிலாடுதுறை அருகே 2வது நாளாக தேடுதல் வேட்டை; நள்ளிரவில் மீண்டும் உலா வந்த சிறுத்தை: வால்பாறையில் இருந்து வனத்துறையினர் வருகை appeared first on Dinakaran.