×

தமிழகத்தில் பறக்கும் படை எண்ணிக்கை 906ஆக அதிகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்ல கூடாது என்று விதி உள்ளது. இந்த தொகையை அதிகரிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பதில் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி ராணுவ வீரர்கள் வந்துவிட்டனர். அவர்களை அந்தெந்த பகுதிக்கு பிரித்து அனுப்பும் பணிகளை போலீஸ் அதிகாரி ஜெயராம் செய்து வருகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க பறக்கும் படை சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 702 பறக்கும் படை எண்ணிக்கையை 906ஆக அதிகரித்துள்ளோம். அதேபோன்று நிலை கண்காணிப்பு குழு 893, வீடியோ படை 254ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்களில் சுவர் விளம்பரம் செய்ததாக புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் கட்டிடங்களில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்ய தடை இல்லை. வாக்குச்சாவடி மையங்களில் வாட்டர் கேன், சாமியானா, நாற்காலி கண்டிப்பாக போட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் காத்து இருப்பவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்க முடியும்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 68,250 வாக்குச்சாவடி மையங்களில் பெண்களுக்கு என்று தனி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைபடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 39 நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியில் ஏதாவது ஒரு வாக்குச்சாவடி மையத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 39 தொகுதியில் ஏதாவது ஒரு வாக்குச்சாவடி மையத்தில் இளைஞர்கள் மட்டுமே தேர்தல் பணியாற்றவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்று செயல்படுத்துவார்கள். இன்னும் ஒன்று, இரண்டு நாளில் தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு விடும். அதன்பிறகு, அங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 4 தேர்தல் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 3 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2வது கட்ட தேர்தல் பயிற்சி வருகிற 7ம் தேதி (ஞாயிறு) நடைபெறும். பயிற்சி மையங்களிலேயே அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். 39 தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் எனது தலைமையில் நடைபெறும்.

The post தமிழகத்தில் பறக்கும் படை எண்ணிக்கை 906ஆக அதிகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Chennai ,Secretariat ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...