×

430.13 மில்லியனாக அதிகரிப்பு தமிழ்நாட்டில் மின் நுகர்வு ஏப்.2ல் புதிய உச்சம்: மின் வாரியம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மின் நுகர்வு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்தது. ஏப்.2ம் தேதி 430.13 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கோடை காலம் தொடங்கும் நேரத்தில் அதிகப்படியான மின் நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டின் அதிகபட்ச மின் நுகர்வை கடந்து மார்ச் 29ம் தேதி 426.439 மில்லியன் யூனிட் என்ற அளவை எட்டியது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி அன்று பதிவான உட்சபட்ச மின் நுகர்வான 423.785 மில்லியன் யூனிட்டை தாண்டியது. இந்நிலையில் ஏப்.2ம் தேதி 430.13 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 430.13 மில்லியன் அலகுகளை தொட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிக மின்சார நுகர்வு. முந்தைய அதிகபட்சமாக மார்ச் 29ம் தேதி ஒட்டுமொத்த மின் நுகர்வு 426.439 மில்லியன் யூனிட் ஆகும். இதன் மூலம் முந்தைய சாதனையை தமிழ்நாடு முறியடித்தது. இதற்கு முன் 2023 ஏப்.20ம் தேதி இருந்த 423.785 மி.யூ என்ற உச்ச பயன்பாட்டை விட 63.4 லட்சம் யூனிட்கள் அதிகம். கோடைகாலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான மின் பயன்பாட்டு நிறுவனம் இன்னும் கூடுதல் மின் தேவை வரும் நாட்களில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மின்சார தேவை 21,000 மெகாவாட்டை கடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த முறை மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில் மின்சார தடை பிரசனையாக மாற கூடாது. மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்வாரியம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக ‘மின் தடை’ இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு – அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை 2ம் தேதி எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சார நுகர்வு இருந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சி காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

The post 430.13 மில்லியனாக அதிகரிப்பு தமிழ்நாட்டில் மின் நுகர்வு ஏப்.2ல் புதிய உச்சம்: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Power Board ,CHENNAI ,Electricity Board ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் தலைமை செயலாளர் ஆலோசனை