×
Saravana Stores

ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கரிமூட்ட தொழில் காச கரியாக்கல… கரிய காசாக்குறாங்க… வேலை வாய்ப்புக்கு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போதிய மழையின்றி விவசாயம் பொய்த்ததால், கரிமூட்டம் போடும் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 35 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும், 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இப்பகுதியில் உள்ள உப்பூர், கடலூர், சித்தூர்வாடி, வெட்டுக்குளம், கலங்காப்புலி, ஆவரேந்தல், பாரனூர், சோழந்தூர், வடவயல், மங்கலம், கலக்குடி, செங்குடி, பூலாங்குடி, குயவனேந்தல், பணிதிவயல், அரியான் கோட்டை, ஆப்பிராய், நத்தக்கோட்டை, நகரி காத்தான், ஆயங்குடி, திருத்தேர் வளை, ஆனந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நெல் சாகுபடி பொய்த்துப் போனது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவடை நேரத்தில் பெய்த மழையால், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகின.

இந்தாண்டு ஒரு சில இடங்களில் கனத்த மழையும், சில பகுதிகளில் மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. ஒரு சில கிராமங்களில் மிளகாய், எள், பருத்தி சாகுபடிகளுக்கு உரிய நேரத்தில் மழை இல்லாததால், எதிர்பார்த்த மகசூல் இல்லை. அப்படியே விளைந்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளியூர் செல்லும் இளைஞர்கள்…
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பெரிய தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லை. இப்பகுதியில் படித்த இளைஞர்கள் வேலை தேடி திருப்பூர், கோவை, சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றனர்.

கை கொடுக்கும் கரிமூட்டத் தொழில்…
இந்நிலையில், போதிய மழை இல்லாமல் வாடும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் தொழிலாக கரிமூட்டம் போடும் தொழில் மாறியுள்ளது. கிராமங்களில் வளர்ந்திருக்கும் காட்டுக்கருவேல மரங்களை வெட்டி, கரிமூட்டம் போட்டு, கரியாக்கி விற்பனை செய்கின்றனர். மேலும், இப்பகுதியில் வளர்ந்திருக்கும் காட்டுகருவேல மரங்களை வெட்டி லாரிகளில் லோடு, லோடாக திருப்பூர், கரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விறகுக்காகவும் அனுப்புகின்றனர். நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் காட்டுக் கருவேல மரங்களை வெட்டி விறகுக்காகவும், கரிமூட்டம் போட்டும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்துகின்றனர். எனவே, இப்பகுதியில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த பெரும் தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் கை கொடுக்கும். கடந்த 5 ஆண்டுகளாக விவசாயத்தில் சரியான மகசூல் கிடைக்காததால், இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இழப்பை சந்தித்த விவசாயிகள், வேலை தேடி வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். பாக்கியுள்ளவர்கள் மட்டுமே கரிமூட்டம் போடும் தொழில், விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கருவேல மரங்களை வெட்டும்போது, கை, கால்களில் முட்கள் பதம் பார்க்கின்றன. ஒரு நாளாவது காயம்படாமல் இருக்க முடியாது. குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இப்பகுதியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கரிமூட்ட தொழில் காச கரியாக்கல… கரிய காசாக்குறாங்க… வேலை வாய்ப்புக்கு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : R. S. Kasa Kariakkala ,Kariya Kasakuranga ,R. S. ,Mangalam ,Ramanathapuram District S. ,Mangalam Taluga ,Mangala ,Kasa Karyakkala ,Karya Kasakuranga ,Dinakaran ,
× RELATED திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை...