×

தைலாவரம் சிக்னல் அருகே வாகன பழுதுபார்க்கும் இடமாக மாறிய ஜிஎஸ்டி சர்வீஸ் சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: தைலாவரத்தில் ஜிஎஸ்டி சர்வீஸ் சாலை தற்போது கார், லாரிகளை பழுதுபார்க்கும் இடமாக மாறிவிட்டது. இதனால் சர்வீஸ் சாலை வழியே பிற வாகனங்கள் செல்ல முடியாத அவலநிலை உள்ளது. இதை தடுக்க, அங்குள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையங்களை அகற்றி, போக்குவரத்துக்கு வசதி செய்து தர வேண்டும் எனஅப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் சிக்னல் பகுதியில் ஜிஎஸ்டி சர்வீஸ் சாலை உள்ளது. தற்போது இந்த சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து கார், லாரி உள்பட பல்வேறு வாகனங்களை பழுதுபார்க்கும் கடைகள் உள்ளன. இதனால் சர்வீஸ் சாலையிலேயே கார்கள், லாரிகள் உள்பட பல்வேறு வாகனங்கள் டயர் பங்க்சர் போன்ற பழுதுபார்ப்பு பணிகளுக்காக நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதையடுத்து சர்வீஸ் சாலை வழியே அரசு பேருந்து உள்பட பிற வாகனங்கள் செல்ல முடியாமல், ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் ஜிஎஸ்டி சாலை வழியே தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்தூர், வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோயில், பரனூர் டோல்கேட் வரை தேசிய நெடுஞ்சாலை துறை 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. எனினும், ஒருசில இடங்களில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு சாதகமாக, அங்கு 6 வழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கு சாலையோர ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்படாமல் சாலையைக் குறுக்கியுள்ளனர். மீதியுள்ள இடங்கில் 8 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் கிடப்பில் உள்ளன. இதுபற்றியும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதுபோன்ற சாலை ஆக்கிரமிப்பு முறைகேடுகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மாதா மாதம் பெருந்தொகை அன்பளிப்பாக செல்வதாகவும் பொதுமக்களிடையே கூறப்படுகிறது.

எனவே, தைலாவரம் ஜிஎஸ்டி சர்வீஸ் சாலையில் உள்ள அனைத்து கடை ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றி, அச்சாலையை முறையாக சீரமைத்து, வாகன பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post தைலாவரம் சிக்னல் அருகே வாகன பழுதுபார்க்கும் இடமாக மாறிய ஜிஎஸ்டி சர்வீஸ் சாலை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GST ,Thailavaram ,Guduvanchery ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...