×

கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை சோதனை: சிறுவியாபாரிகள் கடும் வேதனை

அண்ணாநகர்: தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தனிநபர் 47 ஆயிரம் வரை பணம் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். கோயம்பேடு அனைத்து மார்க்கெட்டுகளில் தினமும் வியாபாரமாகும் தொகையை அங்குள்ள வங்கிகளில் செலுத்த எடுத்து செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துவிடுகின்றனர் என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் கோடிக்கணக்கில் பணம் புழக்கம் ஏற்பட்டுவரும் நிலையில் மொத்தம், சில்லறை வியாபாரிகள் அதிக அளவில் பணத்தை எடுத்துவருகின்றனர். மொத்த வியாபாரிகள் தங்களது கடைக்குவரும் பணத்தை குறிப்பிட்ட ஏஜென்சி நிறுவனத்துக்கு வங்கியில் செலுத்தினால் மட்டுமே அடுத்தநாள் வரவேண்டிய பொருட்கள் கடைக்கு வந்து சேரும். ஆனால் பணத்தை எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லை என தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிடுகின்றனர். இதனால் பொருட்கள் வாங்குவதற்கு பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும்போது பிரச்னை ஏற்படுகிறது. தொடர்ந்து வியாபாரம் செய்யமுடியாத நிலைமை ஏற்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுகுறித்து காய்கறி சிறு, மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது;
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். வியாபாரிகளை மட்டுமே குறிவைத்து பிடித்து பணத்தை பறிமுதல் செய்கின்றனர். வங்கியில் பணத்தை செலுத்த வில்லை என்றால் அடுத்த நாள் மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய காய்கறிகள் கிடைக்காமல் போய்விடும். காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வரவில்லை என்றால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும். அனைத்து காய்கறிகளின் விலை உயரும்.

பணத்துக்கு உண்டான ஆதாரத்தை காட்டிவிட்டு கிண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் 3 மாதத்திற்கு பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வளவு நாள் பணம் இல்லாமல் எப்படி வியாபாரம் செய்ய முடியும். எனவே, வியாபாரிகள் வங்கியில் பணத்தை செலுத்துவதற்கு அடையாள அட்டை வழங்கும் வேண்டும். அந்த அடையாள அட்டை வைத்துள்ளவர்களை மட்டும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை சோதனை: சிறுவியாபாரிகள் கடும் வேதனை appeared first on Dinakaran.

Tags : Election ,Air ,Force ,Koyambedu ,Annanagar ,Tamil Nadu ,Election Air Force ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...