×

ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்

ஆலயம்: லட்சுமி நரசிம்மர் கோயில், ஜவகல், கர்நாடக மாநிலம். (புகழ்பெற்ற ஹொய்சாளர் ஆலயமான பேலூரிலிருந்து 30 கிமீ.)
காலம்: ஹொய்சாள மன்னர் வீர சோமேஸ்வரா (பொ.ஆ.1234-1263).
ஹொய்சாளர் சிற்பக்கலையின் நட்சத்திர வடிவ அடித்தளம் கொண்ட ஆலயக் கட்டுமானமும், சிற்பங்களின் நுணுக்க வேலைப்பாடுகளும் காண்போரைக் கவர்ந்திழுக்கும்.மென்மையான மாவுக்கல் கொண்டு வடிக்கப்பட்ட சிற்பங்களின் பேரழகு, சிற்ப அமைதி, நுண்ணிய ஆபரணங்கள், சுவரெங்கும் இடைவெளியின்றி நிறைந்திருக்கும் சிற்பங்கள் போன்ற அம்சங்கள் அமைந்த ஹொய்சாளர்களின் ஆலயங்களில் பேலூர், ஹளபேடு, சோமநாதபுரா, பெலவாடி, அம்ருதபுரா, நுக்கெஹள்ளி புகழ்பெற்றவை.மேற்கண்ட ஆலயங்கள் போல் புகழ் வெளிச்சம் பெறாமல் மறைந்திருக்கும் மாணிக்கம் ‘ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்’.சிறு கிராமத்து சூழ்நிலையில், பிரதான சாலையில் இருந்து சற்றே விலகி, வீடுகள் சூழப்பட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகமின்றி, அமைதியுடன் காணப்படும் இவ்வாலயத்திற்கு குறைவான எண்ணிக்கையிலான பக்தர்களும், சிற்பக்கலை ஆர்வலர்களும் வருகின்றனர்.

ஆலய வளாகத்தினுள் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களைக்காணுகையில், இவ்வூரில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய ‘ஜவகல் நாத்’தின் நினைவு எழுந்தது.கலை வரலாற்றாசிரியர் ஜெரார்ட் ஃபோகேமா (Gerard Foekema), இந்த கோவிலில் இருக்கும் சுவர் வெளிப்புற புடைப்பு சிற்பங்கள், அவற்றின் அசர வைக்கும் அற்புத வேலைப்பாடுகள் மற்றைய ஹொய்சாள கோயில்களை விடவும் மேம்பட்டவை என்று தனது ‘A Complete Guide to Hoysala Temples’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.கருடன் தாங்கி நிற்கும் லட்சுமி நாராயணர், நரசிம்மரின் இரணிய வதம், நாட்டிய சரஸ்வதி, மகிஷ வதம் புரியும் துர்க்கை, லட்சுமியை மடியில் இருத்தி வீற்றிருக்கும் விஷ்ணு போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

 

The post ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Javakal Lakshmi Narasimha Temple ,Lakshmi Narasimha Temple ,Javagal, Karnataka State ,Hoysala temple ,Belur ,Hoysala ,king Veera Someswara ,Javakal Lakshmi ,Narasimha Temple ,
× RELATED சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம்...