×

சூரியகாந்தக் கல்

சன் ஸ்டோன் எனப்படும் சூரிய காந்தம் ஆழ்ந்த சிவப்பு,மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. சில கற்கள், பிரவுன் நிறத்திலும் இருக்கும். ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இருக்கும். பிங்க் நிறத்தில் கிடைக்கும் சூரியகாந்தக் கல்லை, காதலுக்குரிய கல்லாகப் போற்றுகின்றனர். சூரியகாந்தம் அணிவதால் சுய அன்பு, ஆதரவு, நேசம், காதல் போன்றவை சிறப்பாக இருக்கும்.

எந்த ராசியினர் அணியலாம்?

சிம்மம், மீனம், துலாம் ராசியினர்சூரியகாந்தக் கல்லை அணியலாம். இக்கல் பதித்த நகைகளை அணிந்து கொண்டு உறங்கக் கூடாது. படுக்கையறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது.

யிங் யாங்

சூரியகாந்தம் “யிங் யாங்’’ தத்துவத்தில் யாங் என்ற பிரிவை சேர்ந்ததாகும். அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய சூரியகாந்தம், எல்லா சக்கரங்களையும் எழுப்பி செயல்பட வைக்கும். சுய முன்னேற்றம், தன்னம்பிக்கையை உருவாக்கி மன அழுத்தம் இல்லாமல் உற்சாகத்தை வழங்கும்.

எதனுடன் அணியக் கூடாது?

சூரியகாந்தக் கல்லை அணியும் போது சனிக்குரிய நீல மணி, சுக்கிரனுக்குரிய வைரம் போன்றவற்றைச் சேர்த்து அணியக் கூடாது. நார்வே, ஸ்வீடன், நாடுகளில் இக்கல் அதிகமாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நகைகளில் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் சூரியகாந்தம்

சூரியகாந்தத்தில் ஓரிகான் சூரியகாந்தம் என்று ஒரு வகை உண்டு. இதில் செம்பு அதிகம் கலந்திருப்பதால், இதன் நிறம் ஆழ்ந்த கருஞ்சிவப்பாக இருக்கும். செம்பின் அளவிற்கு ஏற்ப இதனுடைய நிறம் ஆழ்ந்த பிரவுன் நிறமாக மாறும். சூரியகாந்த கற்களிலேயே இந்த ஓரிகான் சூரியகாந்தம்தான் அதிக பலன் தரக்கூடியதாக அமையும். அமெரிக்காவில் ஓரிகான் சூரியகாந்தத்தைா தான் மக்கள் அதிகளவில் விரும்பி அணிகின்றனர்.

அணிவதால் என்ன பலன்?

பிரபஞ்ச சக்தியை ஈர்ப்பதற்கு சூரியகாந்தம் உதவும். சூரியகாந்தத்தை அணிவதால், சூரியனைப் போல ஒளி வீசும் முகத்துடனும் அச்சம் இல்லாமலும் துணிச்சலோடும் உடல் வலிமையோடும் இருப்பார்கள் என்று ஆதி காலம் தொட்டு நம்பி வருகின்றனர். சூரியகாந்தம் மனக்குழப்பத்தை அகற்றி மனிதர்களை நிதானமாக சிந்திக்க வைக்கும்.

எந்த நாளில் எந்த விரலில்?

சூரியகாந்தத்தை அணிவோர் ஞாயிற்றுக் கிழமைகளில் கண்டிப்பாக அணிய வேண்டும். தங்கத்தால் செய்த மோதிரம், காப்பு, பதக்கம் ஆகியவற்றில் பதித்து அணியலாம். வலது கை மோதிர விரலில் அணிவது வெகு சிறப்பு.

எவ்வாறு சுத்தம் செய்வது?

ஒவ்வொரு முறையும் சூரியகாந்தக்கல் பதித்த நகையை அணியும் முன்பு, அதனைப் பசும்பாலில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வெளியே எடுத்து தீர்த்தத்தில் சுத்தம் செய்வது நல்லது. கங்கா தீர்த்தம் அல்லது காவிரி தீர்த்தம் போன்ற புனித நதி தண்ணீரால் அதை சுத்தம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் அல்லது சூரிய காயத்ரி போன்ற மந்திரங்களை உச்சரித்துப் பின்பு அணிந்து கொள்ள வேண்டும். கல் பாதி கடவுள் பாதி என்பதால் கல்லின் ஆற்றலும் கடவுளின் அருளும் இணைந்து பூரண பலனை வழங்கும்.

சூரிய முத்ரா பயிற்சி

சூரிய விரல் எனப்படும் மோதிர விரலில் சூரியகாந்தம் பதித்த மோதிரத்தை அணிந்து அந்த விரலை கட்டை விரலோடு சேர்த்து வைத்து சூரிய முத்திரை யோகத்தை தினமும் காலையில் பூஜா வேளையின் போது செய்து வருதல் நல்லது. இப்பயிற்சி நல்ல பலனைத் தரும். அலுவலகங்களில் வீடுகளில் மனக்குழப்பங்கள் கோபதாபம் ஏற்படும் நேரத்தில் மனம் அமைதி அடைவதற்கும் இந்த சூரிய முத்திரையை செய்து வரலாம்.

சிவன் கோயில் பூஜை

ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் சிவன் கோயிலுக்குப் போய் சிவனை வழிபடும்போது சூரியகாந்தம் பதித்த நகையை அணிந்து செல்வது வெகு சிறப்பு. அதிகாலை சூரிய ஒளி சூரியகாந்தத்தில் படும்போது அதை அணிபவருக்கு கூடுதல் பலன் கிடைக்கின்றது.

எங்குக் கிடைக்கின்றது?

சூரியகாந்தக் கல் பொதிந்த தாது இந்தியாவிலும் கனடா, நார்வே, ரஷ்யா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது. அமெரிக்காவில் ஓரிகான் என்ற இடத்தில் கிடைக்கும் சூரியகாந்தக் கல்லில் செம்புத் தாது அதிகமாக காணப்படுகின்றது. எனவே அங்கு இதற்கு விலை மதிப்பு அதிகம்.

எப்போது அணிவது சிறப்பு?

சூரியகாந்த ரத்தினம், வெப்ப சக்தி அதிகம் உடையது என்பதனால் உச்சிப் பொழுதில் அணிவதை தவிர்க்க வேண்டும். 11 மணிக்கு மேல் நான்கு மணி வரை சூரியகாந்தத்தை உடம்பில் படும்வகையில் அணியாமல் இருப்பது சிறப்பு.

கவனமாகக் கையாள வேண்டும்?

சூரியகாந்தத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். கீழே மேலே விழுந்துவிட்டால் கீறல் விழுந்து தோஷம் உண்டாகிவிடும். பிறகு அந்தக்கல்லை அணிவதால் எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.

எதில் பதிக்கலாம்? எதனுடன் அணியலாம்?

சூரியகாந்தக் கல்லை வெள்ளி,தங்கம் ரோஸ் கோல்ட், செம்பு போன்று எந்த கனிமத்திலும் நகை செய்து, அதில் பதித்து அணியலாம். சூரியகாந்தத்தையும் சந்திரகாந்தக் கல்லையும் சேர்த்து நகை செய்து அணிவதால், அதிக பலன் கிடைக்கும். இவை இரண்டும் முரண்பட்ட பண்புடையன என்றாலும்கூட, மனிதனுக்கு வெப்பமும் குளிர்ச்சியும் தேவைப்படுவதால் இவை இரண்டையும் சேர்த்து அணியலாம். சூரியனுக்கு நட்பாக இருக்கும் புதனுக்கு உரிய
ரத்தினமான மரகதம் அல்லது நீலப்பசும் மணி (லேபிஸ் லஜோலி), பசு மஞ்சள் மணி போன்ற கற்களோடு சேர்த்து நகை செய்து அணியலாம்.

பெயர்க்காரணம்

முற்காலத்தில் இருந்து சூரியகாந்தக் கல்லை பற்றி அமெரிக்காவில் வாழும் பழங்குடி மக்களிடையே ஒரு தொன்மக்கதை நிலவுகிறது. அம்பு குத்தி இறந்து போன ஒரு போர் வீரனின் உடம்புக் காயத்திலிருந்து சிந்திய ரத்த துளிகளே உறைந்து ஓரிகான் சூரியகாந்தக்கற்களாக உருமாறின என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். எனவே இவை சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் இச் சிவப்பு நிறத்துக்கு தெய்வீக சக்தி உண்டு என்றும் மக்கள் நம்புகின்றனர்.பச்சை சூரியகாந்தம் சூரியகாந்தக் கற்களிலேயே மிகவும் அரியதாக கருதப் படுவது செந்நிறத்துடன் பசுமை கலந்த கற்களாகும். பொதுவாக மஞ்சள், ஆரஞ்சு, சிவப்புக்அடர் சிவப்பு நிறங்களில்தான் சூரியகாந்தக் கற்கள் கிடைக்கும். அவற்றில் பச்சை நிறமும் சேர்ந்து இருந்தால், அது புதாதித்ய யோகத்தைத் தரும் அரிய ரத்தினம் ஆகும். இக்கல் கிடைக்கும் போது பலரும் என்ன விலை கொடுத்தாவது வாங்கி அணிந்தனர்.

யார் அணியலாம்?

அரசியலிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் சூரியகாந்தமாகும். இவர்களின் அதிகாரம் சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்பட சூரியகாந்தம் இவர்களுக்கு உதவும்.

The post சூரியகாந்தக் கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...