×

நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர்

1. மார்க்கண்டேய முனிவரின் உபதேசப்படி வால்மீகி இத்தல ஈசனை வணங்கி வீடுபேறு பெற்றார். அதனால் இத்தலம் திருவான்மியூர் ஆனது.
2. இன்றும் ஆலயத்திற்கு அருகே சாலையோரத்தில் வால்மீகி முனிவரின் சந்நதியைக் காணலாம். இத்தல ஈசனை பால்வண்ணநாதர், மருந்தீஸ்வரர், அமுதீஸ்வரர் என துதிக்கிறார்கள்.
3. பாற்கடல் அமுதத்தால் இத்தல ஈசனை செய்து வழிபட்டதால் அமுதீஸ்வரர் ஆனார். சிவபூஜையில் அலட்சியமாக இருந்த காமதேனு, வசிஷ்டரால் சபிக்கப்பட்டு காட்டுப்பசுவாக மாற, இத்தல ஈசனை வணங்கி பாவ விமோசனம் பெற்றதால் இவர் பால்வண்ணநாதரானார்.
4. வால்மீகி முனிவர் இத்தலம் வந்த போது, அவரைக் கண்டு அஞ்சி ஓடிய காமதேனுவின் கால்குளம்பு ஈசனின் தலையிலும் மார்பிலும் பட்டதாம். அந்த காலடித் தடம் இன்றும் மூலவரின் மீது காணலாம்.
5. இத்தலத்தில் அகத்தியருக்கு நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பற்றி ஈசன் உபதேசம் செய்ததால் மருந்தீசர் ஆனார்.
6. மருந்தீஸ்வரருக்குப் பாலபிஷேகம் செய்து, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய் தீரும்.
7. அன்னையின் அழகுப் பெயர் திரிபுர சுந்தரி.
8. தொண்டை நாட்டிலுள்ள பாடல்பெற்ற 32 திருத்தலங்களில் திருவான்மியூர் 25வது திருத்தலம். திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப் பெற்றது.
9. அப்பய்ய தீட்சிதர் மருந்தீஸ்வரரை தரிசிக்க வந்த போது பெருமழை பொழிந்தது. தீட்சிதரால் சுவாமியின் முதுகுப்புறத்தைதான் தரிசிக்க முடிந்தது. ஈசனிடம் திருமுக தரிசனம் வேண்டி முறையிட, ஈசன் மேற்குப் பக்கம் திரும்பி காட்சி தந்தார்.
10. ஈசன் மேற்கே திரும்பியதால் அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள்.
11. தலவிருட்சம் – வன்னிமரம்; தீர்த்தம் – பாபநாசினி குளம். உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்ற கிருஷ்ணர் இந்த தீர்த்தத்தில் நீராடியிருக்கிறார்.
12. இந்த வன்னிமரத்தடியில், அகத்தியருக்கு ஈசன் தனது திருமண கோலத்தைக் காட்டியருளினார். மார்க்கண்டேயருக்கும் ஈசன் இங்கே காட்சியருளினார். அரனின் அருளால் இத்தலத்தில் ஜென்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என ஐந்து தீர்த்தங்கள் உருவாயின.
13. பிரம்மா இங்கு நகரம் அமைத்து ஈசனுக்கு விழா கொண்டாடியதால் பிரம்மனின் பெயரால் இங்கு பிரம்ம தீர்த்தமும் உள்ளது.
14. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமான இதற்கு சோழ, பல்லவ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள்.
15. கோயில் வளாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றையும் குறிக்கும் மூன்று விநாயகர்கள் அருள்கிறார்கள். இவர்களை வணங்க நம் முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடையும்.
16. உள்பிராகாரத்தில் கஜலட்சுமி, வீரபாகு, அருணகிரிநாதர் உடனிருக்க வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி அருள்கிறார். 108 லிங்கங்கள் வரிசையாக அருள்பாலிப்பது விசேஷம்.
17.அன்னை சந்நதி முன்னே உள்ள கல் மண்டபத்தில் நடனமாடும் தியாகராஜர் ஓய்வு எடுப்பாராம்.
18. அன்னையின் மண்டப விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. இங்கு நின்று வேண்டிக்கொள்ள, செல்வம் பெருகும்.
19 ஆலய தூணில் சரபேஸ்வரர் அருள்கிறார். இவரை வணங்க எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். இன்னொரு தூணில் முருகன் மீசையுடன் காட்சியளிப்பது வித்தியாசமானது.
20. சென்னை, திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது இக்கோயில்.

The post நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Markandeya ,Valmiki ,Ithala Isa ,Thiruvanmiyur ,Sage ,Ithala Isaan ,Balvannathar ,Darshaneeswarar ,Amudeeswarar ,
× RELATED தர்ணாவில் ஈடுபட்ட பாஜவினர் காதில்...