×

தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றும் வீடியோ கிராபர்கள் செக்கிங் செய்வதால் அதிருப்தி

 

ஊட்டி, ஏப்.3: நீலகிரியில் தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படையில் பணியாற்றும் சில வீடியோ கிராபர்கள் தங்களது பணியை விட்டுவிட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை செய்வது, கேள்வி கேட்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியானது.

அன்றைய தினம் முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதனால், யாரும் பணத்தை எந்த ஒரு காரியங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியினரிடமிருந்தும் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யவில்லை. மாறாக சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளிடையே பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வெளியூர் சென்றும் திரும்பும் நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை சோதனையிடுவதாக வாகனங்களை அதிகாரிகள் ஓரங்கட்ட சொல்கின்றனர். அவர்கள், வாகனங்களில் வருபவர்களை ஒருமையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில பறக்கும் படை அதிகாரிகள் வெளியில் வராமல் வாகனங்களில் அமர்ந்துக் கொள்கின்றனர்.

அவர்களுடன் தற்காலிகமாக பணியாற்றும் வீடியோ கிராபர்கள் வாகனங்களில் வருபவர்களிடம் ‘எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள், எங்கு வைத்துள்ளீர்கள்’ என மிரட்டுவதும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொண்டுச் செல்லும் பேக்குகளை சோதனையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். பறக்கும் படை அதிகாரிகளை மட்டும் இது போன்ற பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றும் வீடியோ கிராபர்கள் செக்கிங் செய்வதால் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Flying ,Ooty ,Election Commission ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...