×

பந்தலூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு முடிவு பொதுமக்கள் திடீர் வாபஸ்

 

பந்தலூர், ஏப்.3: பந்தலூர் அருகே கொளப்பள்ளி கருத்தாடு பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு முடிவை திடீரென கைவிட்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது என தீர்மானித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி, கொளப்பள்ளி கருத்தாடு 5-ம் வார்டு பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பல ஆண்டுகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமல் இருப்பதாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்வதாகவும் கருத்தாடு பகுதியில் கருப்புக்கொடி கட்டி பதாகைகள் வைத்து அறிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எதுவும் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் திமுக பந்தலூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவரும் சேரங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் அந்த பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 3 மாதத்திற்குள் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார். அதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் ஏற்பட்ட பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

The post பந்தலூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு முடிவு பொதுமக்கள் திடீர் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Kolappally Constituency ,Nilgiri District ,Cerangodu Panchayat ,Kolappalli Techadu 5th Ward ,Dinakaran ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்