×

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விதி வகுக்க உத்தரவிடக்கோரி திமுக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பதிவான வாக்குக்கும், எண்ணப்பட்ட வாக்குக்கும் இடையில் குறைபாடுகள் இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை. அவ்வாறு வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிபுணர்களை வைத்து சோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்க்க முடிவதில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விதி வகுக்க உத்தரவிடக்கோரி திமுக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : DMK ,Election Commission ,ICourt ,Chennai ,Chennai High Court ,RS Bharti ,
× RELATED விளம்பரத்தில் குறிப்பிட்ட பகுதிகளை...