×

இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடாவிலும் காலை உணவு திட்டம் நடைமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

சென்னை: இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடா நாட்டிலும் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110ன் கீழ், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம், படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதத்தில் அண்ணாவின் பிறந்த நாளான 15.9.2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். மேலும், 25.8.2023 அன்று கலைஞரின் பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி; காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார். அதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகிறார்கள்.

இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலங்கானா மாநிலத்திலும் இந்த காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர்.

அவ்வாறே, தெலங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஜ் வலைதளப்பக்கத்தில் நேற்று “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” என பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்.

* 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகிறார்கள்

The post இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடாவிலும் காலை உணவு திட்டம் நடைமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Canada ,Principal ,Mu. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Mu. K. ,
× RELATED கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு...