×

சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

வடசென்னை மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக வாக்குச்சாவடிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மத்திய சென்னையில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேவைப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் 3,726 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 7 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள 4,469 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,852 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் கடந்த 21ம் தேதி கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கடந்த 26ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கை காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட 4,469 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடுதலாக துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்கென 7,374 துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

சிந்தாதரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்ட எண்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை 3,25,422 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகின்ற வரும் 13ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும். வாக்குச்சாவடி மையங்களில் 4,472 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் 20% உட்பட 19,412 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வர். மேலும், ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை கண்காணிக்க கூடுதலாக 16 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில், தேர்தல் பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, லலிதா, ஜெய சந்திர பானு ரெட்டி, சமீரன், ஷரண்யா அறி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Raffle ,District Election Officer ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...