×

போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை விரிவாக்க பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

 

போடி: போடி அருகே முந்தல் மலை அடிவாரம் குரங்கணி பிரிவு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் சென்று வரும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு, மலையடிவாரம் முந்தல், குரங்கணி பிரிவு, போடிநாயக்கனூர், கோடாங்கிபட்டி, பிசி பட்டி, தேனி என அடுத்தடுத்து முக்கிய ஊர்கள் உள்ளன. இதனால் இந்தச் சாலையில் தமிழகம் மற்றும் கேரளா அரசு பஸ்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஜீப்கள், வேன், கார் உள்ளிட்டவற்றில் ஏராளமான கூலி தொழிலாளர்களும், விவசாயிகளும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். கேரளா, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகளும், திரைப்படக் குழுவினரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். அதனால் இந்தச் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்தச் சாலையில் முந்தல் முக்கிய ஜங்க்‌ஷனாக உள்ளது. இங்கிருந்து இடது புறம் சென்றால் போடிமெட்டு வழியாக கேரளா செல்லலாம். வலதுபுறம் சென்றால் குரங்கணி, கொட்டகுடி, டாப் ஸ்டேஷன் செல்லும் சாலையில் செல்லலாம். இந்த நிலையில் முந்தலில் இருந்து குரங்கணி பிரிவு வரை செல்லும் சாலை இரு புறங்களிலும் குடியிருப்பு வீடுகள், கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த சாலையை விரிவுபடுத்த மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சாலையின் இருபுறங்களிலும் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் ஆகியவை ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றப்பட்டு இருபுறங்களிலும் வாறுகாலுடன் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குரங்கணி பிரிவு துவங்கும் இடத்தில் சாக்கடை நீர் எளிதில் கடந்து செல்ல வாறுகால் சீரமைக்கப்பட்டு அதன் மீது பாலம் அமைத்து வாகனங்கள் செல்லும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க 10 மீட்டர் அளவில் புதிதாக தனி பாலம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.எனவே, 400 மீட்டர் அகலம் கொண்டதாக முந்தல் முதல் குரங்கணி பிரிவு வரை உள்ள சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் குரங்கணி பிரிவு துவங்குமிடத்தில் சாக்கடை நீர், வெள்ள நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டு இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகள் விரைவில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்கலாம் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் மலைப் பகுதிக்கு போக்குவரத்து தடை இல்லாமல் இருப்பதற்காக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

The post போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை விரிவாக்க பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Mundal ,Kochin-Danushkodi National Highway ,Podimetu ,hilayatiwaram ,Dinakaran ,
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்