×

தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை


ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடல் சீற்றத்தால் நேற்று சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தென்கடலில் நேற்று முன்தினம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு கடல்நீர் மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து அலைகள் கொந்தளிப்புடன் கடற்கரை மணல் பரப்பில் சூழ்ந்தது. சீற்றம் அதிகரித்து பாறை தடுப்புகளை தாண்டி தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மணல், ஜல்லி கற்கள் சாலையில் குவிந்து கிடந்தன. இதனை நகராட்சி நிர்வாகம் நேற்று ஜேசிபி மூலம் சரி செய்து வந்தது.

மேலும் கலங்கரை விளக்கம் எதிரே புயலால் அழிந்த கட்டிடங்கள் தனுஷ்கோடி தேவாலயங்கள் பகுதிகளுக்குள் புகுந்த கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றியது. நேற்றும் தனுஷ்கோடி தென்கடலில் கடல் சீற்றம் குறையாமல் பெருக்கு ஏற்பட்டதால், அப்பகுதிக்கு பாரம்பரிய மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரிச்சல்முனை ரவுண்டானா சாலை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு தடுப்புப் பாறைகள் சிதைந்து கிடந்தன. இதன் காரணமாக நேற்று காலை முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் புதுரோடு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி நோக்கி செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களையும் திருப்பி அனுப்பினர். தகவல் அறியாமல் தனுஷ்கோடியை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்லாததால் அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தனுஷ்கோடி தென்கடல் சீற்றத்துடன் காணப்படுவது அப்பகுதி மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

The post தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameswaram ,Dhanushkodi South Sea ,Dinakaran ,
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...