மும்பை: ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 14வது லீக் போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீசிய தேர்வு செய்தார். இதன்படி முதலில் மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை ராஜஸ்தான் அணியின் ஸ்விங் பந்துவீச்சாளரான டிரென்ட் போல்ட் பந்துவீசினார். அதில் 5வது பந்தில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் 6வது பந்தில் நமன் திர் ஆகியோர் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். போல்ட் ஓவரில் ரோஹித் அவுட் ஆகி வெளியேறுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
டெவால்ட ப்ரேவிஸ், இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் பாண்டியா மற்றும் திலக் வர்மா களமிறங்கினார். இந்த முறை அதிரடியாக விளையாடி மும்பை அணியை கரை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் தன் மேல் உள்ள கேப்டன்சி பொறுப்பிற்கான கரையை பாண்டியா துடைப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் ஏமாற்றங்களை மட்டுமே கொடுத்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரங்களில் வெளியேற இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணி ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் தன் சொந்த மண்ணில் பெரிய கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மும்பை அணி வீரர்கள் மற்றொரு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் இறுதியில் எளிதாக மும்பை அணியை வீழ்த்தி தனது ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் அணியின் ‘ரைசிங் ஹீரோ’ ரியான் பராக் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.
போட்டிக்கு பின்னர் ரியான் பராக் கூறியதாவது; “உண்மையில் நான் நிறைய விஷயங்களைச் செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் எளிதாக்கினேன். நான் ரன்களை எடுக்காதபோது, நான் அதைப் பற்றி அதிகம் யோசித்து, முழுவதுமாக வெவ்வேறு விஷயங்களைச் செய்தேன், பின்னர் அது பலனளிக்கவில்லை. இந்த ஆண்டு இலக்கை எளிமையாக வைத்திருப்பது – பந்தைப் பார்த்து பந்தை அடிப்பது.
நான் முன்பே சொன்னேன், நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் போது இதுதான் சரியான சூழ்நிலையில் நான் பேட்டிங் செய்ய போகிறேன். ஜோஸ் பட்லர் அவுட் ஆனதும், சிறிது நேரம் கழித்து ஆர் அஷ்வின் பாய் அவுட் ஆனதும், நான் ‘சரி, இதைத்தான் நான் செய்கிறேன். இதைத்தான் கடந்த ஆறு மாதங்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். எனவே எல்லாவற்றையும் கணக்கிடுவது மிகவும் எளிமையாக இருந்தது.
நான் என்ன தவறு என்று கண்டுபிடிக்க முயற்சித்தேன், நான் இந்த அளவில் போதுமான பயிற்சி செய்யவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன். அதனால் நான் (2023) சீசனுக்குப் பிறகு திரும்பிச் சென்று மிகவும் கடினமாக பயிற்சி செய்தேன். அது இப்போது காண்பிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இந்த வகையான பந்துகளை நான் பயிற்சி செய்தேன்” என தெரிவித்தார்.
The post நான் செய்த கடினமான பயிற்சியின் பலன் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்: ரியான் பராக் appeared first on Dinakaran.