×

சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஏப்.2: சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிக்கும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேற்று வேப்பேரி, ரிதர்டன் சாலையில் தொடங்கி வைத்தார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 39,25,144 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 19,28,461 பேர், பெண்கள் 19,95,484 பேர் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1,199 பேர். இவர்களுக்கு, பூத் சிலிப் வழங்கும் பணி தற்போது தொடங்கி, 13ம் தேதி வரை நடைபெறும். நாளொன்றுக்கு சராசரியாக 3,27,097 வாக்காளுக்கு பூத் சிலிப் வழங்கப்பட உள்ளன. இதில் வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள இடம், வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் காணப்படும் விவரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனை வழங்கும் போது வாக்காளர் கையேடு வீட்டிற்கு ஒன்று என வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் போது வாக்காளர்களுக்கான சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்படுகிறது.

சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளில், நாடாளுமன்ற தேர்தலுக்காக 938 மையங்களில் 3,726 வாக்குச்சாவடிகள் உள்ளன. பூத் சிலிப் வழங்கும் பணி 299 மண்டல குழு அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கென 364 கண்காணிப்பாளர்கள் மற்றும் 3,719 களப்பணியாளர்கள் என மொத்தம் 4,083 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில், பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்களின் மூலமாக கடந்த 31ம் தேதி வரை ₹3.35 கோடி ரொக்கமும், ₹5.55 ேகாடி மதிப்பிலான தங்கம், ₹15 லட்சம் மதிப்பிலான செல்போன், ₹7.50 லட்சம் மதிப்பிலான கணினிகள் என மொத்தம் ₹9.13 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடசென்னையில் 35 வேட்பாளர்கள், தென்சென்னையில் 41 வேட்பாளர்கள், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி மையங்களில் 20,016 பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான பணிகள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், கூடுதலாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நாளை கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கும் விவரம்
பூத் சிலிப்பை முதலில் அரசியல் கட்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் குளறுபடிகள் ஏற்பட்டதால், அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த பூத் சிலிப்பில், வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தேதி, வாக்குப்பதிவுக்கான நேரம், வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர்களின் அடையாள அட்டை எண், எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

11 ஆவணங்கள்
வாக்காளர் ஒருவர் பூத் சிலிப் மட்டுமே கொண்டு வாக்களிக்க முடியாது. அவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லாமல், வாக்காளர் வாக்களிக்கவோ, வரிசையில் நிற்கவோ அனுமதி கிடையாது.

The post சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...