- ராஜஸ்தான்
- மும்பை இந்தியர்கள்
- மும்பை
- ஐபிஎல் டி 20 லீக்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- வங்கடே ஸ்டேடியம், ராஜஸ்தான்
- இஷான் கிஷான்
- ரோகிட்
- தின மலர்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. மும்பைதொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் ஷர்மா களமிறங்கினர். போல்ட்டின் துல்லியமான வேகப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரோகித், நமன் திர், பிரெவிஸ் மூவரும் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, மும்பை 2.2 ஓவரில் 14 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
இஷான் 16 ரன் எடுத்து பர்கர் பந்துவீச்சில் சாம்சன் வசம் பிடிபட்டார். மும்பை 3.3 ஓவரில் 20/4 என மேலும் சரிவை சந்தித்த நிலையில், திலக் வர்மா – கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து 5வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். ஹர்திக் 34 ரன் (21 பந்து, 6 பவுண்டரி) விளாசி சாஹல் சுழலில் மாற்று வீரர் ரோவ்மன் பாவெல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பியுஷ் சாவ்லா 3 ரன், திலக் வர்மா 32 ரன் (29 பந்து, 2 சிக்சர்), ஜெரால்ட் கோட்ஸீ 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தப் போராடிய டிம் டேவிட் 17 ரன் எடுத்து பர்கர் வேகத்தில் போல்ட் வசம் பிடிபட்டார்.
மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. பும்ரா 8 ரன், மத்வால் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் போல்ட், சாஹல் தலா 3, பர்கர் 2, ஆவேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரியான் பராக் அதிகபட்சமாக 54 ரன் (39 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அஸ்வின் 16 ரன், பட்லர் 13 ரன் எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட், மபகா 1 விக்கெட் கைப்பற்றினர். ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்திய ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
* 3 கோல்டன் டக் அவுட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் வேகம் டிரென்ட் போல்ட் நேற்று 3 மும்பை பேட்ஸ்மேன்களை கோல்டன் டக் அவுட்டாகி அசத்தினார். ரோகித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு பெவிலியன் திரும்பினர். ரோகித்தை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் போல்ட்.
The post 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது ராஜஸ்தான் appeared first on Dinakaran.