புளோரிடா: அமெரிக்காவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற டேனியலி கோலின்ஸ், தரவரசையில் 22வது இடத்தை பிடித்துள்ளார். கோலின்ஸ் 2140 புள்ளிகளுடன் ஒரேயடியாக 31 இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மயாமி ஓபன் காலிறுதி வரை முன்னேறிய கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா (29 வயது) 16 இடங்கள் முன்னேறி இப்போது 52வது இடத்தில் உள்ளார். கிரீஸ் நட்சத்திரம் மரியா சாக்கரி 2 இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 6ல் எந்த மாற்றமும் இல்லை. போலந்தின் இகா ஸ்வியாடெக் 10835 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆண்களுக்கான ஏடிபி தரவரிசையில், செர்பியாவின் ஜோகோவிச் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துள்ளார்.
மயாமி ஓபனில் பட்டம் வென்ற இத்தாலி வீரர் யானிக் சின்னர் (22 வயது) ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக 2வது இடத்தை பிடித்துள்ளார். அதனால் 2வது இடத்தில் இருந்த முன்னாள் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் (20, ஸ்பெயின் ) ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மயாமி ஓபன் பைனலில் சின்னரிடம் தோற்ற பல்கேரியா வீரர் கிரிகோர் திமித்ரோவ் (32 வயது) 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை எட்டியுள்ளார். இதற்கு முன் இவர் அதிகபட்சமாக 3வது இடத்தை தொட்டுள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான தரவரிசையில் மயாமி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ரோகன் போபண்ணா (44), ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை முதல் இடத்தில் தொடர்கிறது. மிக மூத்த வயதில் நம்பர்1 இடத்தில் இருக்கும் வீரர் என்ற பெருமையையும் போபண்ணா தக்கவைத்துள்ளார். தற்போதைய தரவரிசையில் டாப் 100ல் உள்ளவர்களில், மூத்த வீரரும் போபண்ணாதான்.
The post டென்னிஸ் தரவரிசை பட்டியல் கோலின்ஸ் முன்னேற்றம்: போபண்ணா தொடர்ந்து முதலிடம் appeared first on Dinakaran.