×

மின்னணு எந்திரம், விவிபேட் விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தேர்தலில் தற்போதைய நடைமுறையின்படி ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்பாக மட்டுமே விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்த்து எண்ணப்படுகிறது. ஆனால் விவிபேட் பொறுத்தப்பட்ட அனைத்து மின்னணு எந்திரங்களையும் சரிபார்க்க கோரிக்கை விடுத்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான அருண் குமார் அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மின்னணு எந்திரங்களுடன் இணைக்கப்பட்ட விவிபேட் வாக்குகளையும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். விவிபேட் வாக்குகளை சரிபார்த்தால் வாக்கு எண்ணிக்கையில் தேவையில்லா தாமதம் ஏற்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஒரே நேரத்தில் சரிபார்ப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இதற்காக கூடுதல் அதிகாரிகளை நியமித்தால், 5 முதல் 6 மணி நேரத்திற்குள் முழுமையான விவிபேட் வாக்குகளையும் சரிபார்க்க முடியும். கிட்டத்தட்ட 24 லட்சம் விவிபேட் எந்திரங்களை வாங்குவதற்கு ஒன்றிய அரசு கிட்டத்தட்ட ரூ.5,000 கோடி செலவழித்தாலும், சுமார் 20,000 விவிபேட்களின் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மின்னணு எந்திரம் மற்றும் விவிபேட் வாக்கு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முரண்பாடுகள் குறித்து நிபுணர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

அவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே அனைத்து விவிபேட் எந்திரத்தில் உள்ள ஸ்லிப்புகளையும், மின்னணு எந்திரவாக்குகளையும் சரியாக இருக்கிறதா என்பது பற்றி உன்னிப்பாகக் கணக்கிடுவது அவசியம். மேலும் வாக்காளர்கள் தங்கள் விவிபேட் சீட்டுகளை ஒரு வாக்குப் பெட்டியில் தனியாக போடுவதற்கு அனுமதிப்பதன் மூலம், மின்னணு எந்திரத்தில் உள்ள தங்களின் வாக்குகளை முழுமையாகச் சரிபார்க்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவை மின்னணு எந்திரம் மற்றும் விவிபேட் வழக்கு தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் இணைக்கும்படி உத்தரவிட்டனர்.

* 2019 மக்களவை தேர்தலுக்கு முன், அனைத்து மின்னணு எந்திரங்களிலும், குறைந்தது 50 சதவீத விவிபேட் வாக்குகளை சரிபார்க்கக் கோரி சுமார் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
* அனைத்து மின்னணு எந்திரங்களுடன் இணைக்கப்பட்ட விவிபேட் வாக்குகளை சரிபார்க்கக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவான வாக்குகளுடன் விவிபிஏடி சீட்டுகளை கணக்கிட வேண்டும் என்ற மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

The post மின்னணு எந்திரம், விவிபேட் விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,NEW DELHI ,Election ,Dinakaran ,
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...