×

ஜூன் மாதம் வரை இந்தியாவில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு வரும் 19ம் தேதியில் இருந்து வரும் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் நாட்டில் கடுமையான வெப்பம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மொகபாத்ரா கூறுகையில்,‘‘ ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதில், மத்திய இந்தியா, தீபகற்ப இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இதற்கான வெப்பம் கடுமையாக இருக்கும். இமாலய பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள், வடக்கு ஒடிசாவில் குறைந்த மற்றும் வழக்கத்துக்கும் குறைவான அதிகபட்ச வெப்பநிலையே இருக்கும். இந்த காலக்கட்டத்தில், சமதள பகுதிகளில் வழக்கத்துக்கும் அதிகமான வெப்ப அலை இருக்கும். வழக்கமாக 4 முதல் 8 நாட்கள் வரை இருக்கும் வெப்ப அலை 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும். குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மபி,ஒடிசா, வடக்கு சட்டீஸ்கர்,ஆந்திரா ஆகிய மாநிங்களில் வெப்ப அலை கடுமையாக இருக்கும்.ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குறிப்பாக தென்னிந்தியாவில் வழக்கமானதை விட அதிகபட்ச வெப்ப நிலையே இருக்கும். மத்திய இந்தியா, வட இந்திய சமதள பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிக நாள் வெப்ப அலை நீடிக்கும்’’ என்றார்.

* கோதுமை உற்பத்தியை பாதிக்காது
இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மேலும் கூறுகையில், ‘‘மபியை தவிர கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் வெப்பத்தின் பாதிப்பு இருக்காது. மபியில் 90 சதவீத கோதுமை அறுவடை முடிந்து விட்டது. ஒரு வேளை 35 டிகிரி செல்சியல் வெப்ப நிலை இருந்தாலும் கூட பஞ்சாப், அரியானா, உபியில் கோதுமை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது’’ என்றார்.

The post ஜூன் மாதம் வரை இந்தியாவில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Meteorological Department ,NEW DELHI ,Indian Meteorological Department ,South India ,Parliament ,
× RELATED தென்தமிழகம், கேரளா உள்பட...