×

30 அருணாச்சல் கிராமங்களுக்கு சீனா புது பெயர்: மே 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு.! எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எல்லையில் இந்திய நிலப்பரப்பை அபகரித்த சீனா, தற்போது ஒரு மாநிலத்தையே சொந்தம் கொண்டாட முயற்சிக்கும் நிலையில், அது குறித்து ஒன்றிய அரசு வலுவான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறது.இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்னையை இப்போது ஒன்றிய பாஜ அரசு கையில் எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியா, சீனா இடையே எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி, இந்திய எல்லையில் சீனா பல ஆண்டுகளாக வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைகளை கபளீகரம் செய்யும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற குட்டி நாடுகள் இந்தியாவுக்கு எதிராக வாலாட்டினால் கோபக் கண்களால் சுட்டெரிக்கும் பிரதமர் மோடி, எல்லையில் சுமார் 2000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை அபகரித்த சீனாவுக்கு எதிராக இதுவரை எந்த வலுவான நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஐநா போன்ற உலகளாவிய மன்றங்களிலும் சீனாவின் ஆக்கிரமிப்பு செயல்பாடுகளை கண்டித்து ஒருமுறை கூட குரல் கொடுத்ததில்லை. அதற்கு பதிலாக, இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார். இதனால், சீனாவைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த பயத்தை பயன்படுத்திக் கொண்ட சீனா, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட எல்லைகளில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதியில் 4.5 கிமீ தூரம் ஊடுருவிய சீனா அங்கு 101 குடியிருப்புகளை கட்டி புதிய கிராமத்தையே உருவாக்கியது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுமட்டுமின்றி, அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதை சீனா வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களுக்கு முதல் முறையாக சீன மொழியில் பெயர் சூட்டியது.

அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்களுக்கும், 2023ல் 11 இடங்களுக்கும் புதிய பெயர்களை சூட்டியது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும் என்பதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளே அங்கீகரிக்கின்றன. ஆனால் இதை ஏற்காத சீனா, அருணாச்சல பிரதேசம் திபெத்தின் தெற்கு பகுதி என சொந்தம் கொண்டாடுகிறது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஜங்னான் எனவும் பெயர் சூட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் வெறும் மழுப்பலான கண்டனங்களை மட்டுமே மோடி அரசு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒட்டுமொத்த அருணாச்சலத்தையே கபளீகரம் செய்யும் நோக்கத்துடன் சீனா, அங்கு 30 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அருணாச்சலில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் சிறு நிலப்பகுதி என 30 இடங்களுக்கு சீனாவின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் புதிய பெயரை சூட்டி சீன சிவில் விவகார அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த புதிய பெயர்கள் வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த இடங்களுக்கு இனி அந்நிய மொழிகளில் உள்ள பெயர்களை குறிப்பிடுவது சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் மற்றும் இறையாண்மைக்கு நேரடி தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையாகும்.

அந்நிய மொழி பெயர்களை நேரடியாக மேற்கோள் காட்டவோ, அங்கீகாரம் இல்லாமல் மொழிபெயர்க்கவோ கூடாது’ என உத்தரவிட்டுள்ளது. ஒருபுறம் சீனா எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியோ, கச்சத்தீவு விவகாரம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி தேர்தலில் வாக்கு ஆதாயம் தேட முயற்சிக் கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயரை சூட்டிய சீனாவுக்கு வழக்கம் போல் வலுவான எதிர்ப்பை பதிவு செய்யாமல் ஒன்றிய பாஜ அரசு மவுனம் காப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளன. இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘இந்திய நிலப்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடும் சமயத்தில், பிரதமர் மோடி கச்சத்தீவு தொடர்பான பொய் கதை மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

எல்லை பிரச்னையை தீர்க்க, சீன தரப்புடன் 19 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் பிரதமர் மோடியால் சீனாவின் மீது எந்த தூதரக செல்வாக்கையும் பயன்படுத்தி, இந்திய பகுதிகளுக்கு புதுப்பெயர் சூட்டும் அபத்தத்தை நிறுத்த முடியவில்லை. இதற்கான காரணம் மிகவும் எளிதானது. டோக்லாம் மற்றும் கால்வான் பிரச்னைக்குப் பிறகு, லடாக்கில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த சீனா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்களில் ஈடுபட்ட போதிலும், எதுவும் நடக்கவில்லை என பிரதமர் மோடி நற்சான்றிதழ் தந்ததுதான். 56 இன்ச் மார்பு கொண்டவர், அனல் தெறிக்கும் கண்களை கொண்டவர் சீன பிளிங்கர்ஸ் (கண்களை மறைக்கும் பட்டை) அணிந்துள்ளார். மற்ற நாடுகளின் பகுதிகளுக்கு உரிமை கோருவது மற்றும் பெயர் மாற்றம் செய்வதில் சீனா தொடர்ச்சியான குற்றவாளியாக இருந்து வருகிறது. சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம். மோடி அரசால் செய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கை, சீனாவின் இந்த அபத்தமான செயல்கள் மற்றும் அறிக்கைகளை கடுமையாக கண்டிப்பதும், கண்டனம் தெரிவிப்பதும் மட்டும்தான்’ என கூறி உள்ளார்.

The post 30 அருணாச்சல் கிராமங்களுக்கு சீனா புது பெயர்: மே 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு.! எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : China ,Arunachal ,New Delhi ,Modi ,Kachchathivu ,Lok Sabha ,Arunachal Pradesh ,Dinakaran ,
× RELATED 400 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறி...