சென்னை: எனக்கு வாக்களிக்கவிட்டாலும், பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கு 2 வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்று பேசிய பொன்முடி, ஒருவர் என்னென்னவோ செய்ய நினைத்ததாகவும், உச்சநீதிமன்றம் அவர் தலையில் கொட்டு வைத்ததாகவும் ஆளுநரை மறைமுகமாக சாடினார்.
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில், கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசினார். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று பழனிசாமி கூறுவது மீதமுள்ள 4 விரல்களை காணவில்லை என்பதாகவே கருதப்படும் என்றார். தேனி அல்லி நகரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கச்சதீவுகளை மீட்போம் என்று கூறுபவர்களை நம்பக்கூடாது என்றார்.
தனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தால் தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதாக கூறிய சவுமியா, தருமபுரியை முன்னேற்றுவது மட்டுமே தனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்தார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், விருதுநகர் நகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சி செல்வோரிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் கல்லூரி சாலையில் தூய்மை பணியாளர்களிடம் ஓட்டு கேட்ட அவர், தேநீர் கடையில் தேநீர் அருந்தினார். பிரச்சாரத்தின் போது பலரும் விஜய பிரபாகரனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
The post “எனக்கு வாக்களிக்கவிட்டாலும், பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம்”: தேனியில் நா.த.க. வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பரப்புரை..!! appeared first on Dinakaran.