×

திருத்தண்கால் நின்ற நாராயணப் பெருமாள்

“பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்பப்
பொருகயல்கண்ணீரரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்
சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும்படித்
தண்கோவலூர் பாடியாடக் கேட்டு
நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மை என்ன
நறை யூரும் பாடுவான் நவில்கின்றாளே’’

‘மனதால் ஒன்றுபட்டு உடலால் பல தூரம் பிரிந்திருந்தாலும் செங்கால் நாரையானது தன் காதலியின் குரலைக் கேட்பதற்காக தன் உடலே உருகும் வண்ணம் சிந்தித்துக் காத்திருக்கும். அதுபோல என் மகளான இவள், பெருமாளே, உன் மீது கொண்டிருக்கும் மையலால், உன்னுடன் உரையாடுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் நீர் துளிர்க்க, தன் இளமுலைகள் பொன்னால் செய்யப்பட்ட மலரினைப் போல குறுகியிருக்கின்றன. குடந்தை எம்பருமானையும்,திருக்கோவலூரானையும், திருத்தண்காலூரானையும், நறையூரானையும் துதித்து அவன் நாமங்களையே சுவாசித்துக்கொண்டிருக்கிறளே, இந்தப் பெண்ணிற்காக இரங்கி வரலாகாதா?’ என்று ஒரு தாயின் மனோபாவத்தில் தன் மகளுடைய தாபத்தை விளக்கும் திருமங்கையாழ்வார், கூடவே, ‘ஏ பெண்ணே, நம் குடிக்கு இவ்வாறு நீ காதல் கொள்வது அழகுதானா? இந்த மயக்கத்திலிருந்து நீ எப்போதுதான் விடுபடப் போகிறாய்?’ என்று மகளைப் பார்த்து விசனப்படும் வகையிலும், பெருமாளின் புகழை எண்ணி வியக்கும்படி அமைந்திருக்கிறது இப்பாடல்.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் திருத்தங்கல், திவ்ய தேசமானது எப்படி?

திருப்பாற்கடலில் ஒருநாள் ஒரு பிரச்னை. எதிரெதிர் அணியாக இருந்தாலும், தலைவர்களுக்கிடையே கொள்கை ரீதியாக முரண்பாடு இருந்தாலும், மனத்தளவில் பொதுவாகவே அவர்கள் ஒற்றுமையாகவே இருப்பார்கள். ஆனால் அவர்களின் தொண்டர்கள் அன்பு மிகுதியாலும், ஆர்வக் கோளாறாலும் அந்தத் தலைவர்களிடையே பகைத்தீயை மூட்டிவிடுவார்கள். அப்படித்தான் ஆயிற்று திருப்பாற்கடலிலும். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய, நாராயணின் முப்பெருந் தேவியர்களின் தோழிகளுக்கிடையே போட்டி, யாருடைய தலைவி சிறந்தவர் என்று!

‘ஸ்ரீதேவிதான் உலகையே ரட்சிக்க வல்லவள். எல்லா மக்களின் வளத்துக்கும் அவளே மூலகாரணமானவள். இந்திரன்கூட இந்த தேவியால்தான் பலம் பெறுகிறான். வேதங்களாலும் புகழப்படுபவள் இவளே. பெருமாளும் இவளிடமே பெருங்காதல் கொண்டு, தன் இதயத்திலேயே இருத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் பெருமாள் ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன், ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் போற்றப்படுகிறார்’ என்றது ஸ்ரீதேவி அணி.

‘பூமாதேவியே உயர்ந்தவள். அவளுடைய பொறுமைக்கு ஈடில்லை, இணையில்லை. சாந்தம் இழக்காதவள். வாமன அவதாரம் எடுத்த நாராயணன், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் தானமாக வேண்டிய முதல் பொருளே இந்த பூமியைத்தான். இவ்வளவு ஏன், இவளைக் காப்பதற்காகத்தானே பெருமாள் வராஹ அவதாரமே எடுத்தார்! ஆகவே இவளுடைய பெருமைக்குதான் ஈடு ஏது!’ என்பது பூமாதேவியின் தோழியர் வாதம்.

‘நீளாதேவியோ ரஸ ரூபமானவள். ‘ரஸோவைஸ’ என்று வேதங்கள் புகழ்கின்றன. இவள் நீர் மயமானவள் என்பதாலேயே பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். நீருக்கு ‘நாரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இவளை முன்னிருத்தியே பெருமாள் ‘நாராயணன்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்’ என்றார்கள் நீளாதேவியின் தோழியர்.

தொண்டர்களைத் திருப்திப்படுத்த வெண்டும் என்பதற்காகவோ, அல்லது இந்த வாதத்தால் தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தாலோ, ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டாள். நேராக பூலோகத்தில் தங்கால் மலையென்றழைக்கப்பட்ட திருத்தங்காலுக்கு வந்து கடுந்தவம் இயற்றினாள். தேவியின் தவத்தை மெச்சும் சாக்கில், அவளைவிட்டுப் பிரிய இயலாத வேதனையைத் தீர்க்கும் பொருட்டு, பெருமாள் அவள்முன் தோன்றி, ‘நீயே சிறந்தவள்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார். இப்படி திருமகள் தங்கி தவம் மேற்கொண்ட தலமாதலால், இப்பகுதி திருத்தங்கல் என்ற பெயர் உண்டானதாகச் சொல்வார்கள்.

தங்கால மலை என்று பெயர் வந்ததற்கும் ஒரு புராணம் உண்டு:

இதுவும் போட்டிக் கதைதான். சுவேதத் தீவில் நிலைகொண்டிருந்த ஒரு புனித ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பாக்கியவான் என்ற வாதம் எழுந்தது. இருவரும் தம் போட்டியை பிரம்மன் முன் வைக்க, அவரோ, ‘ஆதிசேடனே பெரும் பாக்கியவான். ஏனென்றால் பெருமாள் எப்போதும் அவனாகிய பாம்பணையில்தான் பள்ளி கொண்டிருக்கிறார். ஆனால் எப்போதோ ஒருமுறை பிரளய காலத்தில்தான் ஒரே ஒரு ஆலிலையில் கிருஷ்ணனாக சயனித்திருக்கிறார்’ என்று தன் தீர்ப்புக்கு விளக்கமும் கொடுத்துவிட்டார். இதைக் கேட்டுப் பொறுக்காத ஆலமரம், மஹாவிஷ்ணுவிடம் தவமாய் தவமிருந்து முறையிட, நாராயணனும் அதற்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பி, தமிழ்நாட்டில், திருமகள் தவமிருந்த திருத்தங்கலில் அந்த ஆலமரம் மலையுருவில் அமையலாம் என்றும், ஸ்ரீதேவியை ஏற்கத் தான் அங்கே வருங்காலத்தில் அந்த மலைமீது தான் நிரந்தரமாக கோயில் கொண்டு அருள் பாலிப்பதாகவும் ஆறுதல் அளித்தார். அப்படி ஆலமரம் மலை வடிவம் கொண்டதால் இந்த தலம் தங்கு, ஆல, மலை அதாவது தங்காலமலை என்று பெயர் பெற்றது.

இவ்வாறு ஆல மலை மீது வந்திறங்கி, திருமகளின் ஏக்கம் போக்கிய பெருமாள் இங்கே நின்ற நாராயண னாகக் காட்சியளிக்கிறார். தொண்டர்கள் தங்களுக்குள்தத்தமது தலைவர்களைப் பற்றி பலவிதமாக மதிப்பும், உயர்ந்த அபிப்ராயமும் வைத்திருந்தாலும், தலைவர்கள் என்ற பொறுப்பில், அந்த உணர்ச்சிவசப்படலுக்குத் தாங்கள் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது; தங்களது பொது நோக்கமான பெருமாளைத் தம் சக்தியால் உயர்த்தி, அவருக்கு ஆதாரமாக இருப்பது மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக ஆசியளிப்பது என்ற நெறிமுறைகளிலிருந்து பிறழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பூமாதேவியும், நீளாதேவியும் தாமும் இதே தலத்துக்கு வந்து பெருமாளுடன் கோயில் கொண்டார்கள்.

இந்தக் கோயிலுக்குள் நுழைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பிரதான வாசலாக தெற்கு நோக்கி இருக்கிறது. சில படிகள் ஏறி அந்த வாயில் வழியாக உள்ளே செல்லலாம். அல்லது கிழக்கு நோக்கியிருக்கும் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாத சுவாமி கோயிலுக்குள் போயும் பின்னாலுள்ள பெருமாளை தரிசிக்கலாம். அதாவது இந்த ஈசனை வழிபட்டு, பக்கத்தில் நவகிரகங்களை வணங்கி, மண்டபத்தைவிட்டு மேற்கு நோக்கி வெளியே வந்தால், ‘நின்ற நாராயணப் பெருமாள் கோயிலுக்குப் போகும் வாழி’ என்று ஒரு அறிவிப்புப் பலகை நம்மை பெருமாள் கோயிலுக்குள் வழிநடத்துகிறது.

முதலில் காட்சி தரும் துலாபாரம், பெருமாள், பக்தர்களின் நிறை&குறைகளை நிறுத்து அருள் பாலிப்பவன் என்பதை சங்கேதமாக உணர்த்துகிறது. இந்த துலாபாரம், வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள் தம் எடையளவில் காணிக்கைப் பொருட்களை நிறுத்துக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. நயனங்களால் நன்மைகள் கொழிக்க வைக்கும் தாயார், அருண கமல மஹாலட்சுமியாக அதாவது செங்கமலத் தாயாராக அற்புத தரிசனம் அருள்கிறாள். பெருமாளுக்கும் திருத்தங்காலப்பன் என்று அழகு தமிழ்ப் பெயர். திருமணம், பிள்ளைப் பேறு என்று தம் நியாயமான குறைகளைத் தாயாரிடம் சமர்ப்பித்து அவை நிறைவேறியதும், அதன் நன்றிக் காணிக்கையாக தாயாருக்கு ஒன்பது கஜப் புடவையை சாத்தி நெகிழ்கிறார்கள் பக்தர்கள்.

மூலக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் வேறெந்த தலத்திலும் காணக்கிடைக்காதபடி, ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடன், ஜாம்பவதியையும் இங்கே தரிசிக்கலாம். ராமாவதாரத்தில், சீதை மீட்புக்காகத் தனக்கு உதவியவர்களில் ஒருவனான ஜாம்பவானுக்கு நற்பேறு வழங்க விரும்பிய பெருமாள், தன் கிருஷ்ணாவதாரத்தில் அவன் மகள் ஜாம்பவதியை மணம் புரிந்து கொண்டார். அந்த ஜாம்பாதியைத்தான் இங்கே நாம் காண்கிறோம். இவர்களோடு பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், அருணன், கருடன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

கிருஷ்ணாவதாரத்துக்கும் இத்தலத்துக்கும் இன்னொரு வகையில் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அந்தக் கதை இதுதான்:

கிருஷ்ணனுடைய பேரனான அநிருத்தனைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள், உஷை. இவள் பாணாசுரன் என்ற அரக்கனின் மகள். தன் தோழியின் வர்ணனை, மற்றும் அவள் புகுத்திய காதல் உணர்வால் அநிருத்தன் மீது மையல் கொண்ட அவள், தோழி மூலமாக அவனைக் கடத்திக் கொண்டுவந்து தன்னை மணம் புரியுமாறு வேண்டுகிறாள். மகளின் உள்ளக்கிடக்கையை உணராத பாணாசுரன், அது அநிருத்தனின் அத்துமீறல் என்று தவறாகக் கணக்கிட்டு அவனை சிறையில் அடைத்து விடுகிரான். ஆனால், தன் மகளே அநிருத்தனை விரும்பினாள் என்பது தெரியவந்தபோது அதை விரும்பாத பாணாசுரன் அநிருத்தனை அழிக்கும் முயற்சியில் இறங்க, அதற்குள் விவரம் தெரிந்து அவன்மீது போர் தொடுக்கும் கிருஷ்ணரால் வதம் செய்யப்பட்டுவிடுகிறான்.

தன் பேரனும் உஷையைக் காதலிப்பதை அறிந்த கிருஷ்ணர், அவ்விருவருக்கும் இந்தத் தலத்திலேயே திருமணம் செய்து வைக்கிறார். இதனாலேயே கிருஷ்ணாவதாரத்தோடு இத்தலம் தொடர்பு கொண்டிருப்பதை அறிய முடிகிறது. அத்தனை புராதன தொன்மை விளங்கும் அருட்கோயில் இது. பெருமாளோடு தாயாரும் அநிருத்தன் உஷை திருமணத்தை நடத்தி வைப்பதற்காக இங்கே வந்து ஒருநாள் தங்கியிருந்ததாலேயே இத்தலம் திருத்தங்கல் என்று வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கோயிலின் மேல்தளத்தில் கருடன் வித்தியாச கோலம் காட்டுகிறார். ஆமாம், நான்கு கரங்களுடன், அமிர்த கலசம் தாங்கியிருக்கிறார். சர்ப்பத்தை மாலையாக அணிந்திருக்கிறார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்தத் தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. பராசரன் என்பவன் வேதம் முற்றோதிய அறிவு சால் அந்தணன். அவர் சேரலாத மன்னனின் கொடைத்திறம் பற்றிக் கேள்வியுற்று, அவனைச் சந்தித்து, தன் புலமையால் அவனை மகிழ்வித்து, பல பரிசுகளைப் பெற்று தன் ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். திருத்தங்கல் வழியாகத் தன் குழுவினருடன் வந்த பராசரன், களைப்புற்று அவ்வூரிலிருந்த ஆலமரத்தடியில் சற்று ஓய்வெடுத்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சில அந்தண இளைஞர்கள் பராசரனை சூழ்ந்துகொண்டு அவருடன் உரையாடலில் ஈடுபட்டார்கள். அந்த இளைஞர்களில் வார்த்திகனின் அறிவுத்திறன் கண்டு வியந்தார் பராசரன்.

அவன் முறை வழுவாமல் வேதங்களைத் துல்லியமான உச்சரிப்புடன், அழகிய சங்கீதமாகப் பாராயணம் செய்வதைக் கண்ட அவர், தான் சேரலாதனிடமிருந்து பெற்று வந்த பரிசுகள் அனைத்தையும் அவனுக்கே கொடுத்து மகிழ்ந்தார்.
இவ்வாறு பராசரன் இங்கே தங்கியதை, ‘செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்பது ஊரே அவ்வூர்….போதி மன்றத்து’ என்றும், பராசரன் மனம் கவர்ந்த வார்த்திகனை, ‘வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்’ என்றும் இளங்கோவடிகள் சிறப்பித்துக் கூறுகின்றார். ஆலமர்ச் செல்வன் என்ற தட்சிணாமூர்த்தியின் ஞானம் கைவரப்பெற்றவன் என்று அந்த இளைஞனை அடிகளார் அற்புதமாக சித்திரிக்கிறார். ஆனால், அவனது அறிவாற்றலை உணராத ஊரார், அவன் கையில் வைத்திருந்த பரிசுகளை அவன் யாரிடமிருந்தோ, எங்கிருந்தோ திருடி வந்தவை என்று பழிச்சொல் கூறி, அவனைச் சிறையிடுகின்றனர். அப்போது வார்த்திகனின் மனைவியான கார்த்திகை, இந்த அநீதியை எதிர்த்து, அழுது பெருங் குரல் கொடுக்கிறாள்.

இது கேட்டு, மதுரையின் காவல் தெய்வமாகிய கொற்றவை தன் கோயில் கதவைத் தாளிட்டுக் கொண்டுவிடுகிறாள். இந்த அபசகுனம் அறிந்து பாண்டிய மன்னன் உண்மையை விசாரித்து அறிந்து, வார்த்திகனை விடுவித்தான். அதோடு அரசு நீதி பிறழ்கின்றதற்கு ஈடாக, அவனுக்கு திருத்தங்கால் மற்றும் வயலூர் ஆகிய இரு ஊர்களை அன்பளிப்பாகக் கொடுத்தான். உற்சவர் திருத்தங்கால் அப்பன் என்றழைக்கப்படுகிறார். ஆடிப்பூர விசேஷ நாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று, ஆண்டாள் சூடிக் களைந்த மாலையையும், உடுத்திக் களைந்த புடவையையும் எடுத்து வந்து இங்கே பெருமாளுக்கு சாத்தி மகிழ்கிறார்கள்.

எப்படிப் போவது: தென்காசி – விருதுநகர் ரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் ரயில் நிலையத்திற்கு அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது. மதுரை, சிவகாசியிலிருந்து செல்லலாம். பேருந்து வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணிவரை; மாலை 4 முதல் இரவு 8 மணிவரை.

முகவரி: அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருத்தண்கால் (திருத்தங்கல்) அஞ்சல்,
விருதுநகர் மாவட்டம் – 626130.

தியான ஸ்லோகம்
ஸ்ரீமச்சீகர வாத பத்தநதலே தேவ: பிதாநாமத:
தீர்த்தம் பாப விநாசநாக்ய மமலம் திவ்யம் விமாநம் பரம்
ஹம்ஸாக்யம் கலு பாரிஜாத லதிகா தத்ப்ரேயஸீ ராஜதே
தஸ்மிந் பாண்ட்ய தராதிபஸ்ய வரதோ விஷ்ணு: புரஸ்தாந்முக:

The post திருத்தண்கால் நின்ற நாராயணப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Narayana Perumal ,Pongar Mellilangongai ,Ponne Booppap Borugayalkannirale ,Sengala Matapurvam Peda ,Thangovalur ,Thangalum ,Navilkinarale ,Dinakaran ,
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்