×

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்: ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு அழைக்குமாறு கடிதம்..!!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரத்தில், ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு அழைக்குமாறு, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அமீர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரது கூட்டாளியான சதாவையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்ததையடுத்து, தற்போது அடுத்தகட்டமாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தங்களது நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், தொழில் பார்ட்னரான இயக்குனர் அமீருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர். மேலும், ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தொழில் பார்ட்னர்கள் அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிமுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நாளை காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள போதைப்பொருள் அலுவலகத்திற்கு இவர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது இயக்குனர் அமீர் மற்றும் தொழில் பார்ட்னர் அப்துல் பாசித் புஹாரி ஆகியோர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு மெயில் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், அப்துல் பாசித் புஹாரி வெளிநாட்டில் இருப்பதாகவும், இயக்குனர் அமீர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருப்பதால் 16ம் தேதிக்கு பிறகு தங்களை அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதமானது நேற்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்ற நிலையில், கடிதத்தை ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்: ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு அழைக்குமாறு கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Aamir ,Ramzan festival ,CHENNAI ,Central Narcotics Control Unit ,Amir ,Ameer ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.