×

மக்களவை தேர்தல்!: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடக்கம்.. நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்..!!

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். சென்னையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்புடன் வாக்காளர் கையேடு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல், 19ல் நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 39 மக்களவை தொகுதிகளில் தேர்தலுக்கான பூத் ஸ்லிப் விநியோகம் செய்யக்கூடிய பணி என்பது இன்று தொடங்குகிறது.

சென்னையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை ஆய்வு செய்தார். பூத் ஸ்லிப்பை முதலில் அரசியல் கட்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் குளறுபடிகள் இருப்பதால் அரசியல் கட்சிகள் பூத் ஸ்லிப் வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த பூத் ஸ்லிப்பில், வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தேதி, வாக்குப்பதிவுக்கான நேரம், வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர்களின் அடையாள அட்டை எண், எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இதனை அடிப்படையாக கொண்டு வாக்களிக்கலாம். வாக்காளர் ஒருவர் பூத் ஸ்லிப் மட்டுமே கொண்டு வாக்களிக்க முடியாது. அவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லாமல், வாக்காளர் வாக்களிக்கவோ, வரிசையில் நிற்கவோ அனுமதி கிடையாது. தற்போது வேப்பேரி பகுதியில் வீடு வீடாக சென்று ராதாகிருஷ்ணன் பூத் ஸ்லிப் வழங்கினார்.

The post மக்களவை தேர்தல்!: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடக்கம்.. நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Tamil Nadu ,election officer ,Radhakrishnan ,CHENNAI ,Lok Sabha elections ,District Electoral Officer ,District Election Officer ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும்...