×

ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு பாபர் மீண்டும் கேப்டன்

கராச்சி: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆஸம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டதை அடுத்து, நவம்பர் மாதம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் பாபர். இதைத் தொடர்ந்து, சர்வதேச டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பொறுப்பேற்றார்.

ஒருநாள் போட்டிகளுக்கும் அவரே தலைமை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 4 மாத காலத்தில் ஒரே ஒரு டி20 தொடருக்கு மட்டுமே ஷாகீன் அப்ரிடி கேப்டனாக இருந்த நிலையில், அவரை அதிரடியாக நீக்கியுள்ள பாக். அணி தேர்வுக் குழுவினர் பாபரை மீண்டும் கேப்டனாக்கி உள்ளனர். வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடர் நடைபெற உள்ள நிலையில், அணி தலைமையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக நியமித்தால் மட்டுமே பொறுப்பேற்பேன் என பாபர் பிடிவாதம் காட்டுவதாக தகவல் வெளியாகி இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உலக கோப்பை டி20 தொடருக்கு கேப்டனாக இருக்க பாபர் சம்மதித்துள்ளார். இந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரே பாபர் மீண்டும் கேப்டனாக சந்திக்கும் முதல் சவாலாக இருக்கும்.

The post ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு பாபர் மீண்டும் கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Babar ,Pakistan ,Karachi ,Babar Azam ,ICC ODI World Cup ,India ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா