×

கிரஷர் உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு: ரூ.1.20 கோடி ரொக்கம், 100 சவரன் பறிமுதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள சீதாராம் ஜலகண்டேஸ்வரர் நகர் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ்குமார். இவர் கிரஷர் நடத்தி வருகிறார். இவரது வீட்டில், நேற்று அதிகாலை 3 மணியளவில், ஓசூர் வருமான வரித்துறை துணை ஆணையர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

கடந்த மார்ச் 28ம் தேதி, லோகேஷ்குமார் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி காரில் வந்த போது, அவரது காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து, உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதையும் லோகேஷ்குமார் சமர்ப்பிக்கவில்லை. இது குறித்து பறக்கும்படை அதிகாரிகள், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்ததன் தொடர்ச்சியாக, வருமான வரி துறையினர் இந்த சோதனையை அவரது வீட்டில் மேற்கொண்டனர்.

நேற்று அதிகாலையில் இருந்து நடைபெற்ற இந்த சோதனை, மாலை வரை நீடித்தது. மேலும், அவரது கிரஷர் தொழிற்சாலைக்கு லோகேஷ்குமாரை அழைத்துச் சென்று வருமானவரி துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

* நெடுஞ்சாலைத்துறை
அலுவலகத்திலும் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பங்களா தெருவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 12.30 மணியளவில் 8 கார்களில் வந்த 40க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் அருகிலுள்ள 7 கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். மேலும் ஒரு கடையின் மாடியில் இருந்த 2 வீடுகளிலும் சோதனை நடத்தினர். அதேபோல் லோகநாதன் தெருவில் உள்ள துணிக்கடை மற்றும் பேன்சி ஸ்டோரிலும் சோதனை நடத்தினர்.

The post கிரஷர் உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு: ரூ.1.20 கோடி ரொக்கம், 100 சவரன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Hosur ,Lokesh Kumar ,Sitaram Jalakandeswarar Nagar ,Krishnagiri district ,Deputy Commissioner of Income Tax ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!